பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை - 13 1. கடவுள் வாழ்த்து - அதிகார விளக்கம் மனம் மெய் முதலியவற்றால் மாண்பு மிகு ஒழுக்கங்களை மனிதர்கள் பின்பற்றி, மகத்தான வாழ்க்கையை வாழவேண்டும் என்று வள்ளுவர் பெரிதும் விரும்பினார். அந்த இலக்கின் வெளிப்பாடாக, மனிதர்களைக் கடவுளிடம் ஆற்றுப்படுத்துகிற வகையில், முதல் அதிகாரத்தைப் படைத்திருக்கிறார் வள்ளுவர். கடவுள் என்பது கற்பனையா? படைப்பா? புதிரின் புறப்பாடா? என்று பேசிப்பேசி, எல்லோரும் போராடிப் புலம்பித் தீர்த்து ஒய்ந்து போன பழைய செய்தியாகும். கட உள் என்னும் இரு சொற்களின் கூட்டு கடவுள். உள்ளதையும், உள்ளத்தையும், உலகத்தையும் கடந்தவர்கள் தான் கடவுளாக மாறி, நமது துதிக்கும் தொழுகைக்கும் பிரார்த்தனைக்கும் உரிய பெரும் பொருளாய் வீற்றிருக்கின்றனர். புத்தர், ஏசுபிரான், மகாவீரர், முகமது நபி போன்ற மகான்கள் எல்லாம், மனிதராய்ப் பிறந்து, மனிதர்களிடையே வாழ்ந்து வளர்ந்து, தங்களது மனித நேயத்தால் சிறந்து, மக்கள் மனத்திலே உயர்ந்து, மகிழ்ச்சியைத் தருபவர்களாக அமர்ந்து இன்று கடவுளர்களாக மாறி நம்மிடையே கொலு வீற்றிருக்கின்றனர். கண்ணுக்குத் தெரியாததுதான் கடவுள் என்றில்லாமல், கண்ணுக்குத் தெரிந்தவர்களே கடவுள்களாக மாறி இருப்பது, வள்ளுவர் வகுத்த கடவுள் வாழ்த்துக்கு வழிகாட்டுதல்களாக அமைந்திருக்கின்றன. o கடவுள் என்னும் சொல்லுக்கு, தெய்வம் என்பதோடு குரு, முனிவன், உள்வழிக் கடந்தோன், முக்குற்றம் கடிந்தோன், ஐம்புலத்தடங்கான் என்றெல்லாம் பொருள்கள் இருக்கின்றன. தெய்வத்தன்மை பெற்று பூமியில் வாழ்கிற மக்கள் யாவரும், புனிதம் பெற்றுப் புகழ் பெருமையுடன் விளங்க வேண்டும் என்பதற்காக, மக்களிடையே விளங்குகின்ற புனிதர்களைக் குருவாக ஏற்று உய்ந்திட வேண்டும் என்பதற்காகவே, கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தைப் படைத்திருக்கிறார்.