பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 353 முற்கால உரை: தமக்குப் புகழுண்டாக வாழ மாட்டாதார், அது பற்றிப் பிறர் இகழ்ந்தவழி, தன் மாட்டாமையான் வந்ததென்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவதென். தற்கால உரை: புகழுண்டாக வாழ முடியாதார், தம் தகுதி இல்லாமையை எண்ணித் தம்மை நொந்து கொள்ளாதவராய்த், தம்மைப் பழிப்பாரை நொந்து கொள்வது எதற்காக? புதிய உரை: புகழ் பெற வாழ இயலாதவர், சிங்கத்தின் கழுத்திலுள்ள பிடரிமயிர் போன்றவராவர். தம் புகழுக்கு அருஞ் செயல்பட இயலாததை எண்ணி வருந்தாது, பிறர் இகழ்ந்த போது, சிலிர்த்துக் கொள்வது எதற்காக? விளக்கம்: சிங்கத்தின் பிடிரிமயிர், சிங்கத்தின் தோற்றத்திற்குச் சிங்காரமாக அமைந்திருக்கலாம். அதனால் சிங்கத்திற்கு ஆற்றல் வந்து விடுமா என்ன்? அது சினத்தின்போது, உடலை சிலிர்க்கும் போது, பிடரிமயிர் நிமிர்ந்தெழுந்து நிற்கலாம். அது கம்பீரத் தோற்றத்தைக் காட்டுமே ஒழிய, வலிமைக்குத் துணை தராதல்லவா! அதுபோலவே புகழ் இல்லாத, புகழைப் பெற இயலாத, புகழைப் பெற முடியாத ஒரு மனிதன், அந்தச் சமுதாயத்திற்கு ஒரு அங்கம். அதாவது பிடரிமயிர் போல, அவனும் ஒரு முடிதான். முடி இருந்தாலும், முடியை இழந்தாலும், மனிதன் வருத்தப்படுவதில்லை. வாழ்வே தொலைந்ததென்று, நொடித்துப் போவதுமில்லை. புகழ்பட வாழாதவன், தன் இழி நிலையை ஆராயாது, புகழுக்கு முயற்சிக்காது இருப்பதை எண்ணி வெட்கப்பட்டு வேதனையடையும் போதுதான், அவன் மனிதனாகிறான். முயற்சியில் ஈடுபடாமல் முடங்கிக்கிடப்பவன், முன்பொரு குறளில் கூறியது போல அவன் சதைப்பிண்டம். மாமிச மலை. சதைக் குன்று. சத்தற்ற பாண்டம். தகுதியற்ற தெண்டம்.