பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 28. கூடா ஒழுக்கம் உடல் மனம் ஆத்மா ஆகிய மூன்றையும் வளர்த்துக் காக்கின்ற காரியம் எல்லாம் புண்ணியம் ஆகும். உடம்பைக் கெடுக்கிற எந்தச் செயலும் பாவம் ஆகும். புண்ணியம் என்பது அறம், தூய்மை, நல்வினைகள்; தெய்வத்தன்மையான செயல்கள்; தானம், தவம் கல்வி அனைத்தையும் உற்சாகமாகக் கொண்டு, ஒழுக்கத்துடன் செய்யப்படும் செய்கைகள். பாவம் என்பது தீச்செயல். ஆங்காரம் நிறைந்த அக்கிரம வினை அகத்திற்குத் தீமையும், தேகத்திற்குப் பங்கமும், ஆன்மாவிற்கு பாதகமும் விளைவிக்கின்ற மறச் செயல்கள். ஆக, பாவ வழியிலிருந்து விலகி, புண்ணியப் பாதையில் வாழ்வதற்காகவே, துறவு மேற்கொள்கின்றவர்கள். தூய்மையான வாழ்வையே தொடர வேண்டும். தொடர்ந்தாக வேண்டும். அப்படி, உள்ளத்தால் ஏற்றுக் கொண்டு, உடலால் ஒத்துக் கொண்ட வாழ்வின் சித்தாந்தத்தை, வரன் முறையாகக் கொள்வது தான் ஒழுக்கம் என்பதாகும். வாழ்வை அழிக்கும் வக்கிரம செயல்பாடுகளை அறவே விலக்குவதைத் தான் அறம் என்றனர். வாழ் வில் மேம்பட்ட மேலோர்கள், தங்கள் அனுபவங்களால் பெற்ற ஞானத்தால், விதித்தனவற்றைச் செய்தலும், விலக்கியவற்றை ஒழித்தலும் தான் ஒழுக்கம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உலகத் தோடு ஒட்டியே செல்வது, சொல்வது, நன்னடத்தையைத் தொடர்ந்து ஒழுகுவது. சீலம், ஞானம், விருத்தி பெற வாழ்வது, மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். அதிலும், உலக வாழ்வை ஒழுகி, உயர்ந்த வாழ்க்கை வாழ, தங்களை அர்ப்பணித்துக் கொண்ட துறவிகளுக்கோ, அப்படி வாழ்கின்ற பொறுப்பு, ஆயிரம் மடங்கு அதிகமாகும். அத்தகைய ஆன்ம ஞானம் மிக்க கூடாரத்தில் தங்கிக் கொண்டு, கூடா ஒழுக்கம் மேற்கொண்டால், ஏற்படும் முடிவுதான் என்ன?