பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௩௩


'மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
- 51.

'மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்
— 52.

'இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை'
– 53.

-ஆகிய இக்குறட் பாக்களில் குறிப்பிடப்பெறும் மனைத்தக்க மாண்பு, மனைமாட்சி, இல்லவள் மாண்பு என்பனவும், பிற குறட்பாக்களில் குறிக்கப்பெறும் பெருந்தக்க, திண்மை (54), தற்காத்தல், தகை சான்றல் (56), மகளிர் நிறை காக்கும் காப்பு (57), பெண்டிர் பெருஞ்சிறப்புப் பெறுவர் (58),புகழ்புரிந்த இல் (59), மங்கலம் (60) - ஆகிய சொற்களும் தமிழியற் பண்பில் பெண்களுக்கு இருக்கவேண்டியதாகக் கருதப்பெறும் நல்லொழுக்கச் சிறப்பையே வலியுறுத்திக் காட்டுவன, என்க.

இனி, எல்லாவற்றுக்கும் முதலாகக் கூறவேண்டுமானால், திருவள்ளுவர் உலகப் படைப்புக் கொள்கையிலேயே, ஆரியவியலினின்று மாறுபட்டு நிற்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இவ்வகையில் ஆரியவியல் தமிழியலினின்று முற்றிலும் வேறுபடுகிறது. அது படைப்புக் கொள்கையைக் கற்பனை சேர்ந்த, அறிவுக்குப் பொருந்தாத ஒரு கட்டுக் கதையாகவே விளக்கப்படுத்தி (விரித்து)க் கூறுவதைப் பார்க்கலாம், ஆரியவியலின் படைப்புக் கொள்கையாக யஜூர் வேதம், புருஷசூக்தம், 11, 12, 13 முதலிய சொலவகங்களில் கூறப் பெறும் செய்திகள் வருமாறு:

"பிரமமே முதல் புருஷன், அவன் சிரசிலிருந்து சோதியுலகமாகிய சொர்க்கமும், பாதத்திலிருந்து பூமியும் உண்டாயின.

அவன் மனத்திலிருந்து சந்திரனும், கண்ணிலிருந்து சூரியனும், செவிகளிலிருந்து வாயுவும், பிராணனும் (உயிரும் வாயினின்று அக்னியும் உண்டாயின.

அவன் முகத்திலிருந்து பிராமணர்களும், புஜங்களிலிருந்து சத்திரியர்களும், தொடைகளிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிருந்து. சூத்திரர்களும் பிறந்தார்கள். இது பற்றிய ரிக்வேதச் சொலவகம் சூத்திரம் மேலே எடுத்துக் காட்டப்பெற்றுள்ளது.”

- இக் கற்பனைக் கட்டுரையை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். இஃது அறிவியலுக்குச் சற்றேனும் பொருந்துகிறதா என்று எண்ணுங்கள். எவ்வளவு பெரிய பொய்! அறிவுக்குப் பொருந்தாத உளறல்! ஏமாற்று: முதலில் சந்திரன் தோன்றியதாம்! அதன் பின் சூரியன் தோன்றியதாம்: