பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௫௪

முன்னுரை 



'பிராமணன் எத்தகைய கொடிய குற்றங்களைச் செய்தாலும் அவனுக்குத் தூக்குத் தண்டனை ஏற்பட்டால் அவனைத் தூக்கில் இடக் கூடாது. அவன் தலையை மொட்டையடித்தல் வேண்டும். அதுவே அவனுக்குத் தூக்குத் தண்டனைக்கு ஒப்பாம். மற்ற வர்ணத்தார்க்குக் கொலையே தண்டனை'

மனு: 8 379.

'கொடிய குற்றம் செய்தவனாயினும் பிராமணனைக் கொல்லாமலும், வேறு எத்தகைய துன்பமும் செய்யாமலும் பொருளைக் கொடுத்து அவனை அயலூருக்கு அனுப்பிவிட வேண்டும். எத்தகைய குற்றம் செய்தாலும் பிராமணனைக் கொல்ல அரசன் நினைக்கலாகாது'

மனு: 8 380, 381.

'பிராமணன் கூலி கொடுத்தோ, கொடாமலோ சூத்திரனிடம் வேலை வாங்கிக்கொள்ளலாம். ஏனெனில் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரன் பிரமனால் படைக்கப்பட்டிருக்கிறான்'

மனு: 8 413.

'பிரமாணம் கேட்கும் போது, பிராமணனைச் 'சத்தியமாகச் சொல்' என்று சொல்லிக் கேட்க வேண்டும். சூத்திரனை நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய மழுவைக் கையில் பிடித்துக்கொண்டு பிரமாணம் செய்யச் சொல்லவேண்டும். அல்லது அவனைத் தண்ணிரில் அழுத்த வேண்டும். அவன் மனைவி, பிள்ளைகளின் தலைகளில் ஓங்கி அடித்தும் பிரமாணம் சொல்லும்படி செய்யவேண்டும்.

மழு எடுத்த சூத்திரன் கை வேகாமலும், தண்ணிரில் அழுத்தப்பட்ட சூத்திரன் சாகாமலும், அவன் அடித்ததால் மனைவி, மக்கள் தலையில் வலி தோன்றாமலும் இருந்தால்தான் அவன் சொல்லும் பிரமாணம் சத்தியம் என்று கொள்ள வேண்டும்.

மனு:8 113, 114, 115

'பிராமணன் எல்லாப் பாவங்களையும் செய்தாலும் அவனை ஒன்றும் செய்யாமல் ஊரைவிட்டுத் துரத்தி விடவும்.'

மனு: 8 380,

'பிராமணனைக் கொல்லும் பாவத்தைப் போல் கொடியது உலகில் வேறொன்றுமில்லை'

மனு: 8 381.

'அரசன் மனுவில் கூறப்பட்டுள்ள தண்டனையை மாற்றக் கூடாது'.

மனு: 9 233,