பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார்

க௫ 


சொற்களிலேயே கருத்துரையாடிக் கொள்ள வேண்டும் என்றவாறான கருத்துப்போக்கும் அறிஞர்கள் நடுவில் அமைந்திருந்தமையை திருவள்ளுவர் பெருந்தகையின் வாயுரையாலும் அறியலாகும்! (காண்க “பல சொல்லக் காமுறுவர் மன்ற, மாசற்ற சில சொல்லல் தேற்றா தவர்” (649). “தெளிவுடைய அறிவரே . சில சொற்களிலேயே திறம்பெறச் சொல்லி முடிக்கும் ஆற்றலார்ந்தவராவார்” என்னும் கருத்தும் இதன் உட்கிடையாகும். ஆக, அன்றைய அறிவுலகப் போக்கில் எதனையும் அகலிதாகச் செய்யும் முறையே முற்றுந் தவிர்ப்புற்றது! அதற்கான உச்சநிலைச் சான்றைக் குறளமைப்பாலும் அறியலாகும்!

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் எண்மையும் (எளிமையும்) என்றிவ்வாறான கூறுகள் கொண்டதாகி, நன்கு தெளிய விளங்கும் தோற்ற நிலையோடேயே அறிவுவெளிப்பாடு அமைந்திலங்க வேண்டும் என்பது - அக்கால அறிவர்க்கு உட்கிடையாகிக் கிடந்த ஓர் உணர்வு! அவ்வுட்கிடை, வெளிப்படை கொண்டுள்ள உண்மையைத் தொல்காப்பிய இலக்கண வரைவுக்குள்ளும் உறைவு கொண்டுள்ளமையைக் காணலாகும்! ( ஒ.நோ: தொல். பொருள். செய்யுள்: 170)

கருத்துச் சாறமாக யாத்தளிக்கப்பெற்ற அறிவுச்செய்தி மூலத்திற்குரிய பொருட்பாடு அறிய விரும்புவார் எவரும், அதற்குரிய மூலவிளக்கங்களை முன்னரே ஆரக் கேட்டும் விண்டு விளங்கியும் அறிவறிந்தவராகிய புலவர் பெருமக்களிடமே கேட்டு விளங்கிக் கொள்ளுவதாகிய பாடமுறை - அன்றைக்கு இருந்தது! கேள்வி என்பது, கேட்டுத் தெரிந்து கொள்ளும் முறை! அதற்கெனத் திருவள்ளுவர் பெருமகன் தனியதிகாரமொன்றையே வகுத்தளித்துள்ள நிலையால் - இதன் அன்றைய இன்றியமையாமையையும் உணரலாம்! ஈண்டிய கேள்வியராகவும் (417), கேள்வியால் தோட்கப்பட்ட செவியினையுடையாராகவும்(418), நுணங்கிய கேள்வியராகவும் இயங்கும் பான்மையரே - அறிவுத் தெளிவும் ஆர்ந்தவராக அக்கால் திகழமுடியும் என்னும்படியான குமுகச்சூழலே - உரிய விளக்கவுரை நூல்களின்மை காரணமாக அமைந்திருந்தது! அதற்கு அடிப்படை, உரிய எழுதுபொருள் வசதி வாய்ப்பின்மைக் குறையே!

தேவையான பெரும்பாலான விளக்கங்களையும் அறிஞர் பெருமக்களிடமே நேரிற்சென்று, அவர் வாய்வழியேதாம் அன்றைய நிலையில் கேட்டுக்கொள்ள முடிந்தது! உரைகளை எழுத