பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௭௮

முன்னுரை 


பிராமம், தைவதம் (தெய்வம்) ஆருஷம், பிரஜாபத்தியம், ஆசுரம், காந்தர்வம், இராஷ்சம், பைசாசம் ஆகியவையாகும்.

இன்று தமிழரிடைய வழக்கில் வந்துள்ள திருமண முறையும் அதன் சடங்குகளும் பெரும்பாலும் ஆரிய வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டனவே யாகும். ஆனால்,

இவற்றுள் பிராம்மம் என்பது, வேதம் கற்ற மாணகன் (பிரம்மசாரி) ஒருவனுக்குத் தன் மகளைத் தானே விரும்பிக் ‘கன்னிகாதானம்’ செய்து கொடுப்பது.

- தைவதம் அல்லது தெய்வம் ஆவது தான் செய்த வேள்விக்கு (யாகத்திற்கு) உதவிய புரோகிதனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுப்பது.

- ஆருஷம் என்பது, தான் செய்யப் போகிற வேள்விக்கு உதவுகின்ற ஒருவனிடத்தில், ஒன்றோ இரண்டோ எருதுகளையும் ஆ(பசு)க்களையும் வாங்கிக் கொண்டு, தன் பெண்ணை மணம் செய்து கொடுப்பது.

- பிரஜாபத்யம் என்பது, மாணகன் ஒருவனை யழைத்து அவனை விரும்பி வேண்டியும், அவன் உறவினர்களிடம் கேட்டும், தன் மகளை மணம் செய்து கொடுத்து அவர்களைத் தர்மங்களைச் செய்ய ஈடுபடுத்துவது.

- ஆசுரம் ஆவது பெண்ணின் பெற்றோரிடம் அவர்கள் பெண்ணை விரும்பிக் கேட்டு, அவர்கள் அப் பெண்ணுக்குக் கேட்கும் பரிசங்களையும் அணிமணிகளையும் கொடுத்துத் தான் மணந்து கொள்வது.

(பெரும்பாலும், இந்தத் திருமண முறையே தமிழர் திருமண முறையாகும். ஏனெனில் தமிழியல் திருமண முறையுள், மணமகளுக்கே மணமகன் பரிசம் அல்லது முலைவிலை அல்லது பாற்கூலி கொடுத்துத் திருமணம் பேசிப் பின்னொரு நாளில் அனைவரும் கூடியமன்றில், கரணங்களுடன் (சடங்குகளுடன்) மணந்து கொள்வது. கீழ்வரும் நூற்பா இதனை உணர்த்தும்

‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே’

- தொல்:(1088)

'மணமகனுக்கு அவன் வேண்டிய தொகையோ, செல்வமோ, பொருளோ மகற்கொடை (வரதட்சிணை)யாகக் கொடுத்துப் பெண்ணை மணம் செய்து கொடுக்கும் வழக்கம் தமிழரதில்லை. அஃது ஆரியப் பார்ப்பனரது வழக்கமே.’