பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௭௯


மேலும், இத் திருமண முறை ‘ஆசுரம்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. ஆசுரம் என்பது அசுரர்களுடைய மணமுறை என்று பொருள்படும் அசுரர் என்று ஆரியர் குறிப்பிடுவது தமிழர்களையே என்றும் உணர்ந்து கொள்க.

- காந்தர்வம் என்பது இளைஞன் ஒருவனும் இளைஞை (இளம்பெண்) ஒருத்தியும், புணர்ச்சியுணர்வால், ஒருவரை ஒருவர் விரும்பி இணைவது. இது ‘தம்முளே புணர்ந்த தாமுறு புணர்ச்சி’ தமிழியலில் இதனைக் களவு மணம் என்பர்.

- இராக்ஷஸம் ஆவது, ஒருவன் தன் உடல் வலிவால் ஒருத்தியை அவள் பெற்றோரின் ஒப்புதலின்றியும் அவள் இசைவின்றியும் அவள் அழஅழ, அவளது வீட்டினின்று உரிமையோரை அடித்தும், கொன்றும், வலியத் தூக்கிச் சென்று விடுவது.

- பைசாசம் ஆவது, கன்னி ஒருத்தி தூங்கும் போதும், குடியினால் மயக்க முற்றிருக்கும் போதும், பித்து (பைத்தியம்) பிடித்திருக்கும் போதும் அவளை வலியப் புணர்வது ஆகும்.

- இனி, இவற்றுள்ளும் முதல் நான்கு திருமண முறைகள் பிராமணர்களுக்கே உரியன என்றும், இராக்ஷஸம் சத்தியர்களுக்குரியதென்றும், ஆசுரமே வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் உரியன என்றும் ஆரியவியல் கூறும்.

இவ்வாறு இம்மணப் பிரிவுகள் வேறுபட்டிருக்க, இவற்றின் சடங்கு முறைகளும் பல வேறுபாடுகள் உடையன. அவ்வகையில் ஆரியவியலும், தமிழியலும் தொடக்க முதல் இறுதி வரை அறவே வேறுபட்டனவாம். ஆரியவியல் பெண்களை அடிமைப்படுத்துவதும் தமிழியல் பெண்களின் உரிமையை உறுதிப்படுத்துவதும் ஆகும். இவற்றை விரிக்கின் பெருகுமாகையால் இத்துடன் நிறுத்தி மேலே செல்வோம்.

மொத்தத்தில், இவற்றின் பெயரமைப்புகளும், முறைச் செயல்களுமே இவை தமிழியலுக்கு உரியன இல்லை என்பதை மெய்ப்பிப்பனவாகும். ஆயினும், இவற்றுள் ஆசுரமும், கந்தர்வமும் தமிழியலில் உள்ள கற்பு, களவு என்னும் மணமுறைகளுக்கு ஒரு வகையில் பொருந்துவனவாம். தமிழில் உள்ள மணம் என்னும் கூடுதல், சேர்தல், இணைதல், ஒன்றுபடுதல் என்னும் பொருள்களைத் தரும் மண் என்னும் வேரடியாகப் பிறந்தது.

மணத்தல்-கூடுதல், திருமண அகவை வந்த ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்கான நிகழ்வு.

உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் உள்ள ஆண், பெண் உயிர்கள் கூடி வாழும் செயலே மணம்.

இனி, அவற்றுள்ளும் மேம்பட்ட ஆறறிவுள்ள உயிரினமாகிய மக்களினத்துள்ள ஆணும் பெண்ணும் கூடி வாழப் போகும் நிகழ்வு இஃதாகையால்