பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௮௯


குறிக்கும்.

- இனி, பண்பு என்பதும் இருவர்க்கு வேண்டிய ஒழுகல் உணர்வு, தன்னைத்தான் கொண்டு இயங்கும் ஒழுக்க உணர்வு, பொது நடக்கை - முதலிய புறவுணர்வுகளையும் செயல்களையும் குறிக்கும்.

- பயன் என்பது, தனிநிலைக் குடும்பப் பயனும், பொதுநிலை உலகப் பயனும் ஆகும். ஒருவர் வாழ்க்கை அவர்க்கும் அவரைச் சார்ந்தவர்க்கும் மட்டன்றி, உலகுக்கும் பயன்படுதல் வேண்டும் என்பதே தமிழியல் கோட்பாடு.

- பழிப்பது என்பது இல்லறத் தாழ்ச்சியையும், அதில் நிகழும் முறைகேடுகளையும் பிறர் பழித்துரைக்கும் படியாக இருப்பது. இவ்வகைப் பழிப்பு ஏதுமின்றி, கணவன், மனைவி இருவரும் கவனமாகச் செயல்படுதல் வேண்டும் என்றார் என்க. குடும்ப வாழ்க்கை பிறர் பழிப்புக்கு உள்ளாகும் பொழுது, அதில் கசப்பும், வெறுப்பும், சலிப்பும், உடைவும், தோன்றுவது இயற்கையாகலின் அவ்வாறுரைத்தார்.

- மாட்சி என்பது, இங்குப் பெண்ணுக்கே கற்பிக்கப்படுவதாகக் கருதலாம். பெண்மைச் சிறப்பே குடும்பத்தின் அனைத்துச் சிறப்புகளுக்கும் பெருமைக்கும் உயர்வுக்கும் உரியவாகையால், பெண்ணுக்கு அது வலியுறுத்தப் பெறுகிறது. இதில் ஆணுக்கு அது வலியுறுத்தப் பெறவில்லையே என்று குறை காண்பார்க்கு, ஆணின் மாட்சிக்கும் பெண்ணுடைய மாட்சியே அடிப்படை ஆகலின், பெண்ணுக்கு அது வலியுறுத்தப் பெறுவது இழுக்கன்று. பெண்ணைத் தாழ்வு படுத்து வதும் அன்று. ஒரு குடும்பத்திற்கு ஆண் குளம் போன்றவன். பெண் அதிலுள்ள நீர் போன்றவள். ஆகலின், அந்நீரைப் போன்ற பெண்ணின் தூய்மை இங்கு வலியுறுத்தப் பெற்ற தென்க, நீராகிய பெண் தூய்மையிழப்பின் குடும்பக் குளம் இகழ்ச்சிக்கும் பழிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகும் என்று எச்சரித்தார் என்க.

- மாண்பு என்பது அதுவே என்க. குடும்பச் சிறப்பே பெண்ணின் மாண்பைப் பொறுத்து அமைவது. ஓர் ஆண் நெகிழ்வுறின், பெண் அதனைச் சீர் செய்ய இயல்வதும், ஒரு பெண் நெகிழ்வுறின் ஆனால் அதனைச் சீர் செய்தல் அரிதாவதும் உலகியலாம் என்க. பெண் மாண்பிழப்பின் குடும்பமே மாண்பிழந்து, முன்னிருந்த அத்துணைச் சிறப்பிலும் தாழும் என்பது இங்கு எடுத்துரைக்கப் பெற்றது. இது பெண்ணின் பெருமை கூறப்பெற்றதே யன்றி, சிறுமை,கூறப்பெற்றதன்று.