பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௦௭


மேற்கண்ட வகையில், பெண்ணின்ப விழைவு மிகுந்திக்கும் கணவன்மார்களுக்கு, அறிவுறுத்தலாகக் கூறும் கருத்துகளைக் கொண்டவையே இப் 'பெண்வழிச் சேறல்' என்னும் அதிகாரமும், அதையெட்டிய 'வரைவின் மகளிர்' என்னும் அதிகாரமும் என்க. அஃதாவது, அப் பெண்ணின்ப வுணர்வாளர்க்கு, ஒருவேளை, அவர் விழைவுக் கெல்லாம் ஒத்துழைத்து, ஈடுகொடுக்கும் பெண்கள் மனைவியராக வாய்க்கப் பெறாவிடில், அவர்கள் அக் கழிகாம வுணர்வுகளைத் தணிவிக்கக் காத்திருக்கும் விலைமகளிரை நாடிப் போவது இயல்பாகலின் அல்லது உலகியலாகலின், முன் அதிகாரத்தை அடுத்தே பின்னதிகாரத்தையும் வரைந்து, அதனால் அவ்வழி வரும் கேடுகளையும் இழுக்குகளையும் தாழ்ச்சி வீழ்ச்சிகளையும் எடுத்துக் கூறி எச்சரித்தார், என்க.

ஈண்டு இவ்விரு அதிகாரப் பொருள்களும், இவற்றுள் கூறப்பெறும் கருத்துகளும், அவற்றை விளக்கப் பயன்படுத்தப்பெறும் சொற்களும், பெண்மை நல நாட்டம் கொண்டவையும், அவர்தம் இழிவு, தாழ்வு மீட்சிகளையும், பெண்ணின் பெருமையை நிலை நாட்டுவதற்குக் கூறப் பெற்ற உயர்வையும், ஆண்கள் அவ்வெளிய பெண்டிர்க்குச் செய்யும் கொடுமைத் தவிர்ப்புகளையுமே கொண்டனவேயன்றி, அவர்களை எச்சிறு அளவிலும், எந்த வகையானும் தாழ்த்துபவை அல்ல என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்க. இவ்வகையில் உலகின் பாலியல் நூலாசிரிய அறிஞர் எவரும், அறிவும் தெளிவும் உள்ள இவைபோலும் கருத்துகளைக் கூறியிருத்தல் இயலாதாம் என்றும் தெளிவுறுக.

இனி, இவ்வதிகாரங்களில், ஆணாளுமை, பெண்ணிழிவுகள் தொடர்பாகக் குற்றம் குறைகளையும் நேரடியாகவே ஆராய்ந்து பார்ப்போம். இதில் வரும்,

'மனைவிழைவார் மாண்பயன் எய்தார்; வினைவிழைவார்

 வேண்டாப் பொருளும் அது'
- 901.

என்பதில், 'மனைவியைக் கழிகாமவுணர்வுடன் மட்டுமே அதிகம் விரும்புவர், பெருமைமிக்க பல பயன்களை அடைய மாட்டார்கள் என்பதும், 'நல்ல மக்கட்குமே பயன்தரும் செயல்களைச் செய்ய விரும்புவார், விரும்பத்தகாத தன்மைச்செயலும் அது' என்றும் கூறும் கருத்தில் தவறென்ன? இதில், பெண்ணிற்குப் பெருமைதரும் கருத்தல்லால் தாழ்ச்சிதரும் கூற்று யாது? என்று நல்லறிவினர் எண்ணி முடிவு செய்க.

அடுத்து 'பேணாது பெண்ணை அஃதாவது மனைவியை காமப் பொருட் டாக விரும்புவான்.தான் ஆக்கமாகக் கருதிச்செய்யும் செயல்களில், பிறர் நாணப்படும் படியான நிலையையே பெறுவான, என்னும் கருத்துப்பட