பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௧௭(மறுதலைக் கடாஅ - கூறப்பெற்ற கருத்திற்கு எதிரிடையான வினாவும்; மாற்றமும்; - விடையும்; மருட்கை-மயக்கம், திரிபுகள்; தெற்றென, தெளிவாக; கொளீஇ கொள்ளச் செய்து; துணிவொடு ஒருதலைப்பட்ட கருத்தொடு)

சொல்லிய வகையால் சுருங்க நாடி
மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்து கொண்(டு)
இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்
நுனித்தகு புலவர் கூறிய நூலே

---தொல்: 1610:25-28

- என்று கூறிய இவ்வகையில், இதில் கூறிய அத்தனைச் சிறப்பியல்களும் தகுதிப்பாடுகளும் நிறைந்த வகையில் இத்திருக்குறள் என்னும் பெருக்குரை நூலைக் கருக்குலைவின்றி அருட்கருள் கொண்டு இம் மக்களினம் திருத்துதல் நோக்கமொடு வெளிப்படுத்திப் போந்தார், இதன் நூற்றந்தை திருவள்ளுவப் பெருமுனைவர், என்க

இனி, இவ் வரும்பெறல் நூலுள் பயன்படுத்தப் பெற்ற செஞ்சொற் களைக் கொண்டே இதன் சிறப்பியல்களைக் கூறுவதெனில், இதனை, ஒரு நுண்ணிய நூல் (373), தொட்டனைத்து ஊறும் மணற் கேணி (396),பயில் தொறும் நயந்தரும் நூல் (783), விழுப்பத்துப் பனுவல் (21), இலங்கு நூல் (410)செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர் நூல் (543), உரை சான்ற நூல் (581), மதிநுட்ப நூல் (636),நூலாருள் நூல் வல்லர் நூல் (683)- என்பதில் எவர்க்கும் மாறுபாடான கருத்து இருத்தல் இயலாதென்க.

இனி, உலகின்கண் எழுதப் பெற்றுள்ள நூல்கள் அனைத்திலும் பெரும் பாலானவை புறப்பொருள் நூல்களே. அஃதாவது, உலகில் உள்ள பொருள்கள் அத்தனை பற்றியும் இருப்பு, தன்மை, இயக்கம், பயன்பாடு ஆகியவற்றை விளக்குகின்ற நூல்களே!

இவற்றுக்கு அடுத்த நிலையில் உள்ளவை, மக்களின் புழக்கம் பற்றிய நூல்களே! அஃதாவன, இவ்வுலக மாந்தரின் மொழி, இனம், வாழ்க்கை பண்பியல், நாகரிகம், அரசியல், ஆட்சியியல், வரலாறு, போர், காதல், கற்பனை, கலை, பொழுதுபோக்கு முதலியவை பற்றிய நூல்களே.

ஆனால், திருக்குறள் ஓர் உயிரியக்கப் பொருள் நூல் ஆகும். அஃதாவது, மாந்தரின் அகத்தும், புறத்தும் விரிந்து கிடக்கும் அத்தனை உயிரியக்கக் கூறுகளிலும் இதில் அடக்கிக் கூறப்பெற்றுள்ளன. இன்னும் விரிவாக இதை விளக்கினால், மக்களின் மனம், அதனுள்ளிருந்து வெளிப்படும் உணர்வுகள், அவற்றை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகள், அவற்றின்