பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௨௫



அடக்க முடையவர்க்கு இருக்க வேண்டிய ஒழுக்கமுடைமை பற்றி அடுத்த ஓர் அதிகாரத்தையும்,

ஒழுக்கமுடையவர், தம்முள் குடும்ப அளவில் பழக்கமும் புழக்கமும் வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில், ஒருவர் மனைவியை இன்னொருவர் விரும்பாமை வேண்டி, அதனை வலியுறுத்தப் பிறனில் விழையாமை அதிகாரத்தையும்,

அவ்வாறு மனவுணர்வாலும் புழக்க நெருக்கத்தாலும், தம் நிறையுடைமை வழுவி, பிறனில் விழைதல் எனும் குற்றம் தப்பித் தவறி நேர்ந்து விடின், அந்நிலையில் ஒருவர் கொள்ளவேண்டிய பொறுமைத் தேவையை வலியுறுத்தப் பொறையுடைமை அதிகாரத்தையும்,

அதன் பின்னர் மாந்தப் புழக்கத்தில், ஒருவர் உழைப்பாலோ, பிழைப்பாலோ உயர்ந்தும், மற்றவர் அந்நிலைகளில் சிறிது தாழ்ந்தும் உள்ள நிலையில் தோன்றும் பொறாமை உணர்வைத் தவிர்க்க வேண்டியும் தடுக்க வேண்டியும், அழுக்காறாமை அதிகாரத்தையும்,

அழுக்காறு கொண்டவன் அடுத்த நிலையில் பிறனுடைய உடைமையை விரும்பும் தீநோக்கைத் தடுத்துக் கூறு முகத்தான் வெஃகாமை என்றோர் அதிகாரத்தையும்,

பிறன்பொருள் வெஃகியவன், தன்னை மறைக்கவும், பிறன் பெருமையைக் குறைக்கவும் முயற்சி செய்யும் நோக்கில், மற்றவரிடம் அவனைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் கூற முற்படுவானாகையால், அதைத் தடுத்து நிறுத்தும் கருத்தில், புறங்கூறாமை அதிகாரத்தையும்,

அவ்வாறு புறங்கூறும் வகையில், அவன் பலபடியாகப் பயனில்லாத கூற்றுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தவிர்க்கவும் வேண்டிப் பயனில சொல்லாமை எனுமோர் அதிகாரத்தையும்,

அதன் மேலும் அவ்விடங்கா உணர்வின் கிளர்ச்சியாலும் எழுச்சியாலும், சொல்வானும் சொல்லப்பட்டானும் ஒருவர் மேல் ஒருவர் வெறுப்புற்றுப் பகை கொண்டு, ஒருவர்க் கொருவர் தீவினை செய்ய அஞ்சாதவராய்ச் செயல்படுவதைக் கண்டிக்கும் வகையில் தீவினையச்சம் எனும் அடுத்த அதிகாரத்தையும்,

இவ் விழிநிலைகளை யெல்லாம் தடுத்து நிறுத்தி, உலகின்கண் ஒருவர்க் கொருவர் அன்பும் அமைவும் கொண்டு நல்லிணக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவூட்டவும் தெளிவூட்டவும் வேண்டி, ஒப்புரவறிதல் எனும் அதிகாரத்தையும்,