பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௨௬௬

முன்னுரைஆனால், இவற்றுள்ளும், 'ஆதி' தமிழ்சொல்லே என்பார் சொல்லாய்வறிஞர் ப.அருளி,

ஆயினும் அமரர், அன்னம், கணம், காரணம் ஆகிய நான்கு சொற்களும் தமிழ்ச் சொற்களாகவே இருத்தல் வேண்டும். இவை பழந்தமிழ் நூல்களுள்ளும் மிகப் பரவலாகவே வழக்கூன்றி உள்ளன. இவற்றின் சொல் விளக்கம் வருமாறு:

அமர். இரு - அமர்தல் - இருத்தல், அமரர் - இருப்பவர். அஃதாவது மேல் உலகம் என்று கருதப்பெறும் உலகில் நிலையாக இருப்பவர். அவரே தேவர். தேவர்ப் பற்றிய கருத்து ஆரியத்திலும் உண்டு; தமிழிலும் உள்ளது. தேவர் என்பதும் தமிழ்ச் சொல்லே, தேவர் இருப்பு கற்பனையாகவோ, மூட நம்பிக்கையாகவோ இருக்கலாம். ஆனால் அதற்காக அச் சொற்கள் தமிழ்ச் சொற்கள் இல்லை என்று கூற முடியாது. பழந்தமிழரும் மூட நம்பிக்கையால் சில உலகியல் கருத்துகளையும் நடைமுறைகளையும் வகுத்துக்கொண்டவர்களே. அறிவியல் நோக்கற்ற நெடும் பழங்காலத்தில் மூட நம்பிக்கைகள் இருந்திரா என்று கொள்வதற்கில்லை. எனவே, அவையும், அவை பற்றிய சொற்களும் தமிழியல் மரபினவாகவே கொள்ளப்படுதல் வேண்டும். உலகின் அனைத்து இனங்களிலும் இற்றை அறிவியலுக்கும் மெய்யறிவியலுக்கும் பொருந்தாக் கற்பனைகளும் மூட நம்பிக்கைகளும் உண்டு என்க. எனவே, தமிழரெல்லாரும் அறிவினராகவே பிறந்தனர், வளர்ந்தனர், இருந்தனர், வாழ்ந்தனர் என்று மிகைபெறக் கூறுதல் அறியாமை. உலகின் அனைத்து உயிர்களும் படிநிலை வளர்ச்சி பெற்றனவே, பெறுவனவே என்று தெள்ளிதின் உணர்க.

அன்னம்: மூலம் தெளியப்படவில்லை. எனினும், இதுவும் தமிழரிட்ட தமிழ்ப் பெயர்ச் சொல்லாகவே இருத்தல் வேண்டும். இவ்வாறு அயல் நிலத்துப் பொருள்கள், உயிர்கள், பயிர்கள் தமிழ் நிலத்துக்கு வந்த பின்னர், பழந்தமிழர் அவற்றின் உருவும், பருவும், திருவும், செயலும் கண்டு தமிழால் இட்ட பெயர்கள் நூற்றுக் கணக்கில் உள. அவற்றுள் சில:

குதிரை, ஒட்டகம், கோவேறு கழுதை, நீர்க்கோழி, நெருப்புக் கோழி, கிண்ணிக் கோழி, நீர்நாய், கரும்பு, உருளைக் கிழங்கு பேரீச்சை, மா, கொய்யா, நரந்தை, ஆரஞ்சு, வெங்காயம், முந்திரி, கொடிமுந்திரி, தேக்கு, பிண்டி (அசோகு) செந்தாழை முதலிய எண்ணிறந்தன அயலகப் பொருள்களே. அவற்றுள் ஒன்றாகவே அன்னம் இருக்கலாம். வாத்தும் அவ்வகையதே.

கணம்: நொடி, கூட்டம் இரண்டு பொருள் தருவது. இதுவும் தமிழ்ச் சொல்லே,

கண் - கணம் கண்ணிமைப் பொழுது

கண்-பொருந்துதல்-கூடுதல்-கூட்டல்(கணக்கு) மிகுதல், பெருகுதல் பொருளில் கூட்டத்தைக் குறிக்கும்