பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௪௭


காரணம்: கரு-வேர் அணம் பின் பெயர் ஒட்டு (தக்கணம், ஒட்டியாணம், இறவாணம்-காண்க)

கரு + அணம் - கரணம்-கரணியம்-காரணம்

கரு + அமம் - (பெயர்ச்சொல் பின்னொட்டு)- கருமம் (தமிழ்ச் சொல்)

எனவே, காரணமும் தமிழ்ச் சொல்லே, என்க.

(இச் சொற்கள் பற்றிப் பாவாணரிடம் நேரில் விளக்கம் கூறி, அவை தமிழ்ச் சொற்களே என்று வழக்காடி ஒப்புக்கொள்ளச் செய்துள்ளார். இவ்வுரையாசிரியர் - என்க)

எனவே, இவை தவிர பிற பதின்மூன்று சொற்களுமே திருக்குறளில் வட சொற்கள் என்பதில் ஐயமின்று - என்க.

- இனி, பழந்தமிழ் இலக்கிய நூல்களுள், திருக்குறள் ஒன்றே நூலாசிரியர் பலராலும் தம்தம் கருத்துகளுக்கு இயைபாக எடுத்துக் கையாளப் பெற்றுள்ள சிறப்பைப் பெறுகின்ற நூலாகும் என்று தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

அவ்வகையில், கிபி. 12-ஆம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்திருந்த உலகப் பெரும் பாவலர் கம்பர், தாம் பாடிய இராமாயணத்துள் திருக்குறள் பாக்களை முழுவதுமாகவோ, பகுதியாகவோ, பலவிடத்தும் எடுத்து இணைத்துப் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட குறட்பாக்களைக் கம்பர் தம் நூலில் எடுத்தாண்டுள்ளதாகக் கூறுவர்.

இனி, இராமாயணம் தவிர,

'புறநானூற்'றில் 32இடங்களிலும், 'புறப்பொருள் வெண்பாமாலை'யில் 35இடங்களிலும் 'பதிற்றுப் பத்'தில் ஒர் இடத்திலும், பத்துப்பாட்டில் ஓர் இடத்திலும், சிலப்பதிகாரத்தில் 13 இடங்களிலும், மணிமேகலையில் 91 இடங்களிலும், 69 சீவக சிந்தாமணியில் 20இடங்களிலும், வில்லிபாரதத்தில் 12 இடங்களிலும், திருவிளையாடல் புராணத்தில் 7 இடங்களிலும், கந்த புராணத்தில் 4 இடங்களிலும்

திருக்குறள் பாவடிகள் எடுத்தாளப் பெற்றுள்ளவாகக் கூறுவர். (உண்மை 15.1284)

இனி, தமிழ் இலக்கியப் பரப்பினுள் வைத்து எண்ணப்பெறும் நூல்களுள்ளேயே திருகுற்ளே பலவாறான் உலக இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ள, இன்னும் மொழிபெயர்க்கப் பெற்றும் வரும் தலையாய நூலாகும் என்பது நாம் அனைவரும் பெருமைப் பட்டுக் கொள்ளும் ஓர் உண்மைச் செய்தியாகும். அதனைப் பற்றியும் இம் முன்னுரையுள் ஒரு சில கூறுவது முகாமையும் இன்றியமையாமையும் ஆகும்.