பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௬௭


உண்மைதான். ஆனால் ஆண் பெண் என்ற முறையும், அழகு, ஆண்மை என்னும் அடிப்படையும் கருதி, அவர்கள் புதிய முறையில் இணை சேர்த்து வாழ வைக்கப்பெற்றுள்ளனர் என்பதைப் போலுள்ளது என்க.

அவர் கூற்றுகளை மேலும் கவனியுங்கள்:

"திருக்குறட் கருத்துகளைத் திசை திருப்புவதோ, குறள் நூலை ஊனப்படுத்வதோ எனது நோக்கமன்று. நுண்மாண் நுழைபுலம் கொண்ட பழைய உரையாசிரியர்களின் உரைகளில் குறைகண்டு, அவர்களை இழிவுப்படுத்துவதும் என் குறிக்கோள் அன்று. திருக்குறளின் உட்பொருளைச் சிதலப்படுத்தி, என்னுடைய கருத்துகளை அதில் ஏற்றுவதும் என் எண்ணமன்று”

- (என்னுரை பக். vi)

ஆனால் அவர் வேறு வகையாகக் கூறும் சில கருத்துகள் இவ்வெண்ணங்களை மறுதலிப்பதாகக் கருதவும் இடந்தருகின்றன. கீழே பாருங்கள்.

"பழைய உரையாசிரியர்கள் செய்த இயல் பாகுபாட்டையும் அதிகார முறைமையையும் அப்படியே பின்பற்றித்தான் இன்றும் திருக்குறளுக்குப் பொருள் கூற வேண்டுமென்பது ஒருவகையான மூட நம்பிக்கை”.

(என்னுரை பக் 4-ஆம் பத்தியின் பின் பகுதி)

"மரபு நிலை, என்பது ஒரு கால கட்டத்தில் உரையாசிரியர்கள் தத்தம் கருத்து நிலைக்கு ஏற்ற வகையில் பொருள் சொல்லுவதற்கு இயைபாக ஆக்கப்பட்டவை. அப்பாகுபாடுகளைக் குறைகூறுவது என் கருத்தல்ல. பொருளுக்கு (subject) ஏற்பவும், காலக் கருத்து வளர்ச்சியைய ஒட்டியும், இயல்பான பகுப்புகளைப் பொருள் தரும் முறைக்கேற்றபடி செய்து கொள்வதில் தவறில்லையல்லவா?”

(மேற்படி பத்தியின் முன்பகுதி)

"இவை போன்ற பல்வேறு ஆய்வுக் கருத்துகளைப் பல காலக் கட்டங்களில் பல தமிழறிஞர்கள் வற்புறுத்திச் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே, எது மரபு வழி? - யாருக்கும் தெரியாது. அப்படியிருக்க, ஏன் மரபு வழியில் ம்ட்டுமே திருக்குறளுக்குப் பொருள் கூற வேண்டும்?”

(என்னுரை பக் xii)

-என்றிவ்வாறு கூறப்பெற்ற அறிஞர் ஆனந்தன் அவர்களின் கருத்துகள் எவ்வாறு புதுமை என்னும் பெயரால் தமிழியல் மரபு நிலைகளுக்கு எதிரானவை என்பதை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். இந்நிலை ஆரியத் தாக்கத்தைவிடக் கொடியது. இஃது அறிவு, அறிவியல் என்னும் பெயரால்