பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௫௪

முன்னுரை




- மா.வெ. நெல்லையப்பர்

"திருக்குறளின் பெருமையை - புகழை எமது ஒரு வாயால் உரைக்கவும், எளிய கையால் எழுதவும் இயலா, ஏற்ற சொற்களும் எளிதில் அமையா. திருக்குறளில் செறிந்து, நிறைந்து, பொருந்தியுள்ள சொல்வளம், பொருள்வளம், செப்புமுறை, வைப்புமுறை, தொகுத்தும் வகுத்தும் தொடர்புபடுத்தியும் அமைத்துள்ள அமைப்பு, உடன்பாட்டிலும் எதிர்மறையிலும், இன்மொழியிலும் வன்மொழியிலும், வழிமொழிந்தும், வலியுறுத்தியும், இடித்துக் காட்டியும் கூறும் கூற்றுகள் முதலானவற்றின் பண்புகளைப் பலமுறையும் படித்து, உள்ளத்தால் உணர்ந்து, உணர்ச்சியால் அறிந்து, அறிவால் மதித்து, மதிப்பின் பெருமையால் மகிழ்ந்து, மகிழ்வால் அகம் நெகிழ்ந்து, ஆர்வம் மலர்ந்து, அன்பு கனிந்து, விளைந்த விளைவாம் இன்பத்தை இனிது நுகரும் போதுதான், திருக்குறளின் தனிப்பெருமை தெளிவாக விளங்குமேயல்லாது, மொழிவதாலும் எழுதுவதாலும் அதன் பெருமை முழுதும் உரைக்கவோ, வரைந்தறிவிக்கவோ இயலாதென்பது எளியேன் கண்ட தெளிவாகும்.

திருக்குறள், உயிர்களின் உணவு; உள்ளத்தின் உணர்வு; உணர்ச்சியின் ஊற்று; அறிவின் கருவூலம் - (களஞ்சியம்); அன்பின் அமளி; அறிவின் தெளிவு: அகத்தின் விளக்கு; அறத்தின் பிறப்பிடம்; ஆற்றலின் தோற்றம்; இன்பத்தின் இருக்கை; ஊக்கத்தின் சேர்க்கை; செந்நெறி செறிவிடம்; ஒழுக்கம் உறைவிடம்; வாழ்க்கையின் விளக்கு; உண்மையின் உறையுள்; பண்பின் பயிலிடம்; உலகின் ஒரு நெறி; மக்களின் ஆக்கம்; மாந்தரின் வாழ்வு; மானத்தின் வரம்பு; பிறர்நலப் பிறப்பிடம்; தன்னலம் தகர்விடம்; துறவின் நிறைவு; பொருளின் புதையல்; பொறையின் பொற்பு; வீரத்தின் நேர்மை; மறத்தின் மாண்பு; நாட்டின் நாட்டம்; காதலின் கனிவு; ஈகையின் இன்பம்; கடமையின் காட்சி; முயற்சியின் முகப்பு; ஊழின் பகைவாள்; கூற்றுக்கு மாற்றான்; தமிழின் அமிழ்தம்; தென்மொழிச் செல்வம்; திராவிடர் தேட்டம்; தமிழர்கள் சட்டம்; சிறப்பின் முகடு; கலைகளின்நிலைக்களன்; சாகாக் கல்வியின் அடிப்படை; பேராவியற்கைப் பெருவாழ்வின் வழி. இன்னும் எந்தெந்த வகையில் உயர்த்திச்சொன்னாலும் எல்லாம் பொருந்தும்.

- உறையூர் இறையனார் (திருக்குறள் ஆராய்ச்சிநூல். 1949) -

“Sage Valluvar, priest of the lowly clan.
No tongue repeats, no speech reveals thy name,
Yet, all things changing, dieth not thy fame.