பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.௮௪

முன்னுரை அனைத்து நலன்களையும் மக்கள் அனைவரும் சமமாக நுகர்ந்து, துய்த்தல் இயலும் என்பது அவர் கொள்கையாகவே நூலுள் விரிந்தும் பொதிந்தும் கிடக்கின்றது.

அத்துடன் அவர் கூறவந்த அறவுணர்வுகளையும், அறச் செயல்களையும் இல்லறத்தார்க்கு உரியவை இவை, துறவறத்தார்க்கு உரியவை இவை, அரசர்க்கு, அஃதாவது ஆட்சியில் உள்ளவர்க்கு அமைச்சர்க்கு அஃதாவது ஆளுமைப் பொறுப்பில் - அதிகாரத்தில் உள்ளவர்க்கு, மற்ற பிறர்க்கு உரியவை இவை இவை என்று பகுத்தும் வகுத்தும் தொகுத்தும் கூறுகின்ற பாங்கு மிகவும் போற்றத்தக்கதாம், என்க. அவ்வகையில், அவர் தொகுத்துக் கூறும் அறவுணர்வுகளும் அறச்செயல்களும், அனைவர்க்கும் பொதுவானவையாகவும், வகுத்துக் கூறும் அறவுணர்வுகளும் அறச் செயல்களும், அவ்வவ் வியல்களிலும், அதிகாரப் பகுப்புகளிலும் கூறப்பெறுபவர்களுக்கே சிறப்பானவையாகவும் அவர் கருதிக் கூறியதாக உணரமுடிகிறது.

எடுத்துக்காட்டாக, அறத்துப் பாலில், இல்லறவியலில் கூறப் பெறும் அறவுணர்வுகளாகிய அன்புடைமை, செய்ந்நன்றியறிதல், நடுவுநிலைமை, அடக்கமுடைமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, ஒப்புரவறிதல் ஆகிய மன அறவுணர்வுக் கூறுகளும், இனியவை கூறல், புறங்கூறாமை, பயனில சொல்லாமை, புகழ் ஆகிய சொல் அறவுணர்வுக் கூறுகளும், மக்கட்பேறு, விருந்தோம்பல், ஒழுக்கமுடைமை, பிறன்மனை விழையாமை, தீவினையச்சம், ஈகை முதலிய செயல் அறவுணர்வுக் கூறுகளும், இல்லறத்தார்க்கே உரிய சிறப்புக் கூறுகளாகவும், பிறர்க்கும் உரிய பொதுக் கூறுகளாகவும் ஆசிரியர் விதந்துரைப்பதாகக் கருத இடமுள்ளது.

அதேபோல், அதில் கூறப்பெறும், இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம், மக்கட்பேறு ஆகிய மூன்று உலகியல் அறவுணர்வுக் கூறுகளும் கூட இல்லற நோக்கமுடையார்க்கே உரிய அறநலக் கூறுகளாகவே கூறப் பெறுகின்றன. இவை நேரடியாகக் துறவறம் மேற்கொள்வார்க்குப் பயன்படுவன அல்ல.

இனி, இவைபோலவே, துறவறவியலில் கூறப்பெறும் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவா அறுத்தல், ஊழ் ஆகிய பதினான்கு அறக் கூறுகளும், துறவியர்க்கே சிறப்பாகவும், இல்லறத்தார்க்குப் பொதுவாகவும் கூறப் பெற்றனவே யாகும் என்றுணர்க. என்னை? இல்லறம் மேற்கொண்டொழுகுவார் இவற்றைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தல் உலகியல் நிலையில் கடினமாகலினாலும், பெரும்பாலும் இவற்றினின்று தவறியொழுகுதல் இயல்பே ஆகலினாலும், இவற்றை அவர்க்குப் பொதுவாகவும், துறவியர்க்குச் சிறப்பாகவும்,