பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௬௯

முன்னுரை இவ்வாறு, கற்பு நிலையைப் பெண்ணுக்கும் ஆணுக்கும் பொதுவாகச் சொன்னது போலவே, பொது அறக் கூறுகளையும் அவர் இரு பாலார்க்கும் பொதுவாகவே கூறியுள்ளதை அறிவினார் தெளிவாக உணர்ந்து கொள்க இல்லறவியலில் கூறப்பெறும் அனைத்து அறவியல் கூறுகளும், மற்றுப் பொருட்பாலில், அரசியலில் கூறப்பெறும் கல்வி, கேள்வி, அறிவுடைமை, முதலிய அனைத்துச் சிறப்பியல் கூறுகளும், அமைச்சியலில் கூறப்பெறும், சொல்வன்மை, வினைத்துய்மை, வினைத்திட்பம், வினைசெயல் வகை முதலிய செயலியல் கூறுகளும், நட்பியலில் கூறப்பெறும் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடா நட்பு முதலிய பழகியல் கூறுகளும், குடியியலில் கூறப்பெறும் குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நாணுடைமை முதலிய குணவியல் கூறுகளும், இருபாலார்க்கும் பொதுவாகக் கூறப்பெற்றவையே.

திருக்குறளில் எவ்விடத்தும் ஆரிய அறநூல்களிலும் பிறநூல்களிலும் உள்ளன போல் பெண்மையை இகழ்ந்தோ, இழிவு படுத்தியோ, தாழ்த்தியோ கூறப்பெறவில்லை என்பதைத் தெளிவாக உணர்க. அதே போல் ஆண்மையை உயர்த்தியோ, பெருமைப்படுத்தியோ, புகழ்ந்தோ எங்கும் கூறப்பெறவில்லை என்பதையும் தெளிவாக உணர்க. தமிழ் இலக்கியங்களில்கூட, பிற மதவியல் கருத்துகளுக்கு ஏற்றம் தருகிற நூல்களில், சிற்சில விடங்களில் பெண்மையைத் தாழ்த்தியோ, இழிவுபடுத்தியோ கூறப்பெறுவதுண்டு. திருக்குறள் மதவியல் சாராத நூலாக மட்டுமன்றி, உலகப் பொது மாந்தவியலுக்கும் அறவியலுக்கும் மாறுபடாத நூலாகவும் உள்ளதால் இதில், எங்கும் பெண்மை கீழ்மைப்படுத்தப் பெறவில்லை; என்று திண்ணமாய்க் கூறலாம்.

பொருட்டால், நட்பியலில், பெண்வழிச் சேறல் அதிகாரத்துள் கூறப் பெறும் கருத்துகள், பெண்ணை அல்லது பெண்மையை இழிவு படுத்துவனவாகச் சிலர் கருதுகிறார்கள், அவ்வதிகாரத்துள் கூறப்பெறும் அனைத்தும் மனவியல், அறிவியல், உடலியல், வாழ்வியல் சார்ந்த அறிவியல் கருத்துகளே ஆகும். பெண்ணின்பத்துத் தலை கால் தெரியாமல், தறிகெட்டு, மனைவி உள்பட வேறு பெண்டிர் சிலரிடமும் அளவிறந்த கழிகாம ஈடுபாடு கொண்டு திரியும் வெறியர் சிலரைத் தம் உள்ளத்தையும், அறிவையும், உடலையும், நோக்கத்தையும் கெடுத்துக் கொள்ளாமல் தடுத்து நிறுத்தி, நல்வழியில் உய்விக்க வேண்டியே ஆசிரியப் பெருந்தகை அருள் உள்ளம் கொண்டு கூறிய கருத்துகளாகும் அவை அவ்வதிகாரத்துள், உடல் ஈடுபாட்டிற்காகத் தன் மனைவியை அளவிறந்து விழைவதும், அதற்காக அவளிடம் தாழ்வாகவும் அஞ்சுவது போலவும் நடப்பதும் அவளிட்ட ஏவல்களைச் செய்வதும், அவற்றின்வழித் தன் செயலாண்மையை இழப்பதுமான ஆடவனின் பேதைமையும் இழிவும் எடுத்துக் கூறி இடிப்புரை