பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார்

௬௭


செய்யப்பெறுகிறது. வேறு எந்த அற நூலாரும் கூறாது விட்ட நுட்பமான கருத்துகளாகும் இவை. மருத்துவ இயல் படியும், இதில் கூறப்பெறும் கருத்துகள் மேம்பாடும் உண்மையும் உடையன. மற்றபடி, இவ்வதிகாரத்துள் கூறப்பெறும் கருத்தியல் நுட்பங்களை உரைப் பகுதியுள் கண்டுகொள்க.

இனி, அவ்வதிகாரத்தையடுத்து வரும் ‘வரைவின் மகளிர்’ என்னும் அதிகாரமும் பெண்கட்கு இழிவு சேர்ப்பதாகக் கூறப்பெறுவதும் உண்டு. பெண்மையை விலைபோக்கி வாழ்வு செய்யும் மாந்தக் கீழ்மை உலக நாடுகள் அனைத்திலும், இவ்வுலக மாந்த வியக்கம் தொடங்கிய நாள் முதல், அனைத்து அறிவியல் கூறுகளும் அளவிறந்து முன்னேறியுள்ள இந்நாள் வரை உண்டு என்பதை அனைவரும் அறிவர். இதுவும் மக்கட்கு இவ்வழி எச்சரிக்கை செய்வதற்கே எழுதப்பெற்றதாகும். அறவழி ஆசிரியர் ஒருவர், மனவியல் அறிவு கொண்டு, பெண் பித்தர்க்கு அருள் நோக்கோடு கூறிய கருத்துகளாகும் இவை; பெண்களை இழிவு படுத்துவன அல்ல. இவற்றின் சிறப்பியல்களையும் பொதுமை நலன்களையும் உரையின்கண் கண்டு தெளியலாம்.

இனி, தமிழ் இலக்கியங்களுக்குள், பெண்களைக் குறிக்கும் சொற்களுள் ஒன்றாகிய ‘பரத்தை’ என்னும் சொல் பரவலாகக் குறிக்கப் பெறுவதுடன், அத்தகைய நடத்தை கெட்ட பெண்களை இழிவாகவும் கூறப்பெற்றுள்ளது. ‘பரத்தை’ எண்பதற்கு கட்டுப்பாடின்றிப் பரந்துபட்டு ஒழுகுபவள் என்பது பொருள். அஃதாவது திருமணம் செய்து கொள்ளாமல், பொருளுக்காக ஆடவர் பலரிடம் தன் உடலை விலைபோக்கி வாழ்பவளே இலக்கியங்களில் பரத்தை எனப்பெறுகிறாள்.

ஆனால், திருக்குறளில், இத் தீயொழுக்கப் பெண்களைப் பற்றியும், இவர்களின் நடவடிக்கைகளைப் பற்றியும் எச்சரித்துக் கூற வந்த இடத்தில் கூட ஆசிரியர், இவர்களைப் ‘பரத்தையர்’ அல்லது ‘விலைமகளிர்’ அல்லது ‘பொதுமகளிர்’ என்றெல்லாம், இழித்துக் கூறாமல், திருமணம் செய்து கொள்ளாமல் ஒழுகும் மகளிர் என்னும் பொருளில் ‘வரைவின் மகளிர்’ அஃதாவது, வரைவு திருமணம் இல் மகளிர் என்று மிகப் பண்புடைய, நாகரிகமான சொற்களாலேயே குறிப்பிடுவதை நாம் நன்கு கவனிக்க வேண்டும். இச்சொல் திருவள்ளுவராலேயே புதுவதாக உருவாக்கப்பெற்ற சொற்களில் ஒன்றாகும். இச்சொல் வேறு இலக்கியங்களில் இல்லை. இவர் பயன்படுத்திய இன்னொரு மதிதகு புதுப்புனைவுச் சொல் ‘வாழ்க்கைத்துணை’ என்று மனைவியைக் கூறும் சொல்லாகும். இச்சொல்லில்தான் எத்துணைப் பொதுமை மணம் கமழ்கின்றது என்பதை எண்ணிப் பாருங்கள்)

இவர் இழிவாகக் கருதிய பரத்தை என்னும் சொல்லை ஓரிடத்திலும் பயன்படுத்தவில்லை - எண்பது இவர் பெண்மையை மதிக்கும் செயலுக்கு இன்னோர் எடுத்துக்காட்டாகும். இதற்கு மாறாக, வேறு பெண்கள்