பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

126


வருங்கால், துலங்கித் தோன்றிய, என்றும், எந்நிலையிலும், எக்காலத்தும், மாறுபடாத, மாந்தவினத்தின் மேம்பட்ட உயிருணர்வுக் கூறுகளை உய்த்துணர்ந்து, அவற்றையே கடைப்பிடிகளாக்கி முறை கொண்டன. இவ்வாறாக, மாந்த வினத்தார் முறைகொண்ட அம் மீமிசை மாந்த நிறைகளே அறம் என்று நின்றன என்க. மொத்தத்தில் 'அறம்' என்பது அனைத்து நிலைகளும் ஓர் இயற்கை யொழுங்கே (The reality of the natural existence) என்க. நிலைத்திணைகள் (தாவரங்கள்), வானம், காற்று, காடு, மலை, கடல் முதலியன மட்டுமே இயற்கை இல்லை. மாந்தனும் இயற்கையே. எனவே மாந்தனுக்குள்ள தனி இயற்கைத் தன்மையே அறம் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

இவ்வுலகின்கண், ஒரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள அனைத்து உயிரினங்களது வாழ்க்கை நிலைகளையும் மிக உன்னிப்பாகக் கவனித்தால், அவை தங்களுக்காகவும், பிறவற்றிற்காகவுமே வாழ்வதை உணரலாகும். பிறவுயிர்களின் கூட்டுத் துணையின்றி, எவ்வகையின் எந்த உயிரும் தானே தனித்து வாழ்தல் இயலாதென்பது இயற்கையின் இயங்கியல் நெறி யென்க. இனி, இன்னோர் இயங்கியல் உண்மையும் யாதெனின், ஒவ்வொரு கீழ்நிலை உயிரும், தன் உடலியல் வாழ்க்கையில், தன்னையடுத்துள்ள மேனிலை உயிர் களுக்கு உணவாகவும் ஊட்டமாகவும் அமைந்து நிற்பதும் என்க. இவ்வகையில் உடற்படிநிலை வளர்ச்சி போன்றே, அறிவுப் படிநிலை வளர்ச்சியும், உள்ளத்தின் படிநிலை வளர்ச்சியும், படிப்படியாக மேம்பட்டு, வாழ்நிலை மிக்கோங்கிய நிலையில், அவ்வுயிரினங்களுக்குள்ள பொதுமை நல உணர்வு, சிலபல கரணியங்களால், படிப்படியாகக் குறுகி வருவதையும், அதேபொழுது, தந்தலவுணர்வு படிப்படியாகக் கூடிவருவதையும் உணர்தல் வேண்டும்.


அறிவு வளர்ச்சி தன்னலவுணர்வை மிகுவித்தலும், பொதுமை நல உணர்வைக் குறைவித்தலும் உய்த்துணர்தற் பாலன. அனைத்துக்கும் மேனிலை உயிரினமாகிய மாந்த வுயிரினம், உள்ளத்தின் இணைவளர்ச்சியற்ற அறிவினது தனி மிகை வளர்ச்சியினால், அறிவியலடிப்படையில் உடலாற்றலை அனைத்தானும் மிகுவித்துக் கொண்ட நிலையில், தந்தலவுணர்வே பெரும்பாலும் மிக்கூர்ந்து, பொதுநலவுணர்வு குறைந்து நிற்பதையும் உய்த்துணர்க. இஃது, இயற்கை இயங்கியலுக்கு மாறானதும், உயிரழிவையும் உலக அழிவையும் நோக்கியதுமாம் என்று நுண்ணிதின் உணர்ந்த முன்னோர்களும், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவர்களுமாகிய மெய்யறிவுச் சான்றோர்களும், மக்கள்மாட்டுப் பொதுமை நலவுணர்வுகளும், அவற்றின்வழிச் சிந்தனைகளும் செயல்களும், மற்ற கீழ்நிலையுயிர்கள் அனைத்திலும் மிக்கோங்கி வளர்ந்து, முழுவளர்ச்சி பெற்று, மீமிசை