பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அ-அறத்துப்பால்-முன்னுரை



அவ்வகையில், இந்நூலுக்கு உரையெழுத முற்படும் உரையாசிரியர்களும், தங்கள் தங்கள் காலமாறுதல்களுக்கும் கருத்து வளர்ச்சிக்கும் ஏற்ப, மூல நூல் அமைப்புகளை மாற்றிக்கொண்டு செல்வதும் அறிவுப் பொருத்தமுள்ளதாகப் படவில்லை. இவ்வாறு செய்யின், நூல் வடிவமே காலப்போக்கில் மாறுபட்டு, மூல அமைப்பு அல்லது நூல்வடிவம் எஃது என்னும் ஐயப்பாட்டு நிலைக்கு வந்துவிட வேண்டியிருக்கும்.

'பால்' என்னும் சொல் பகுப்பு, பகுதி என்னும் பொருள்களை உணர்த்தி நிற்கும். அறத்துப்பால் என்பது, அறக்கூறுகளின் பகுதி என்பதாகும். அதுபோலவே பொருட்பாலும், இன்பத்துப்பாலும் என்க.

அறத்துப்பால் முப்பத்தெட்டு அதிகாரங்கள் கொண்டது என்பது, திருவள்ளுவ மாலைச் செய்யுள்களிலுள்ள,

'அறம்முப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தால் தெளிய'

என்னும் மதுரைப் பெருமருதனார் பாட்டானும் (37)

'பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
தூய துறவறம் ஒன்று ஊழாக'

என்னும் எறிச்சலூர் மலாடனார் பாட்டானும் (25) தெரிய வருகிறது.

அஃதாவது, பாயிரம் (இதில் அறவியல்) நான்கு அதிகாரங்கள், இல்லறவியல் இருபது அதிகாரங்கள், துறவறவியல் பதின்மூன்று அதிகாரங்கள், ஊழ் ஓர் அதிகாரம் என முப்பத்தெட்டு அதிகாரங்கள் ஆகும் என்க.

இனி, அறவியல் என்பது என்னென்று நுண்ணிய உணர்வளவான் காட்ட, 'அறமுதல் உணர்தல்', 'வான் சிறப்பு', 'நீத்தார் பெருமை', 'அறன் வலியுறுத்தல்' ஆகிய நான்கு அதிகாரங்களையும் ஆசிரியர் பயன்படுத்திக் கொள்வார்.

அடுத்து, அறவியலை இரண்டு கூறுகளாகப் பகுத்து, ஒன்று 'இல்லறம்', இரண்டு 'துறவறம்' என்றும் கூறி,

- இல்லறவியலின்கண், இல்வாழ்க்கை வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந் நன்றியறிதல், நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ் ஆகிய இருபது அதிகாரங்களையும்,