பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

186


சக்கரத்துக்காகிப் பின்னர், அவ்வாறு சுழற்சியுடைய உலகத்திற்காகியது.

சுழற்சியுடைய உலகத்துள் மாந்தனும் சுழன்று வாழும் நிலைப்பட்டவன். எனினும் சுழலாது நிலைப்பவன். வாழ்க்கைச் சுழற்சியுள் உழல்பவன். ஆனாலும் தான் சுழற்சியின்றி வாழ்பவன்.

2. வாழ்வாங்கு வாழ்பவன் - மாந்த வாழ்க்கை என்பதற்கோர் ஒழுங்குண்டு. அஃது ஐயறிவுடைய பறவையினம் விலங்கினங்கள் போல் உடலால் மட்டுமின்றி, உள்ளத்தாலும் அறிவாலும் முறை பேணுவது. எனவே, பிறவுயிரினங்களின் இயக்கத்திற்கு வாழ்க்கை என்று பெயரில்லை. மக்களது உயிரியக்கத்திற்கே வாழ்க்கை என்னும் பெயரும், அதற்கொரு, முறையும் ஒழுங்கும் உண்டு என்க. இவை, உடற் படிநிலை (பரிணாம வளர்ச்சியால் மட்டின்றி, அறிவுப் படிநிலை, உள்ளப் படிநிலை வளர்ச்சியாலும் அமைந்தவாம் என்க.

மக்கள் வாழ்க்கை மட்டுந்தான் பொருளுடையது; சிறப்புடையது; தனித்தனி வரலாறுடையது; மீமிசை மாந்த வளர்ச்சியுடையது; தெய்வக் கூறுடையது மிக மேம்பட்ட நிலையில் கடவுள் தன்மையுடையது; அதனினும் மேலோங்கி என்றென்றும் இருக்கும் அழியாத இறைத்தன்மையுடையது. எனவே வாழ்வாங்கு வாழ்தல் ஓர் ஒழுங்கின் கண்ணே நிகழ்வது. -

மக்களுள் ஓரறிவுயிராயும், ஈரறிவுயிராயும், மூவறிவுயிராயும், நாலறிவுயிராயும், ஐயறிவுயிராயும் வாழும் தன்மையினாரும் உண்டு; அது போல, அறிவுடைய மக்களுள்ளும், வாழ்வாங்கு வாழாத உடலும், மனமும், அறிவும் உடையாரும் உண்டு என்க.

அவருள்ளும், இவ்வுயிர்மெய் வாழ்க்கையின் பொருள் அறிந்துகொண்டு, உளத்தாலும் அறிவாலும் தமக்கியற்கையானமைந்த ஒரு குறிக்கோளைக் கண்டுணர்ந்து, அதன்படியும், உலகியலால் முன்னரே மக்கள் குமுகாயம் வகுத்துள்ள மக்களியங்கியல் நெறிப்படியும், அவற்றுள்ளும் மேம்பட்ட அறமுறைப்படியும் வாழ்தலே வாழ்வாங்கு வாழ்தல் என்ப. அவ்வகையில் வழுவாது வாழ்பவனே வாழ்வாங்கு வாழ்பவன் ஆவான் என்க.

3. வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - வானில் உறைவதாகக் கருதப்பெறுகின்ற தெய்வங்களின் வரிசையுள், வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனும் ஒன்றாக வைத்து வணங்கப் பெறுவான் என்க.

‘தெய்வம்’ என்னும் சொல் ‘தீ’ என்னும் வேரடியாகப் பிறந்தது. அழித்தல் என்னும் பொருள் கொண்டது.