பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

190



பெண் - எனும் ஒருத்திக்கு என இவ்வுலகில் தனிச்சிறப்பும், தனி இயக்க நிலையும், தனி உடலியல், உள்ளவியல், அறிவியல் கூறுகளும் உள. இனி, அவளே, ஆண் எனும் ஒருவனுக்குத் துணையாக வாழ்க்கைப்பட்டு, இல்லறத்தின் மறுபகுதியாய், வாழ்க்கைக்கு இன்னொரு துணையாய் ஆகின்ற பொழுது, அவளுக்கு என்று வேறு தனிச் சிறப்பும், வேறு தனி இயக்க நிலையும், வேறு தனித்தனியான உடலியல், உள்ளவியல், அறிவியல் கூறுகளும் உள்ளன. அவை, முதற்கண் ஒரு பெண்ணான நிலைக்கு வேறானவை.

என்னை? மனைவிநிலை எய்தப்பெறாத ஒரு பெண் தன்வகையில் தனிச் சிறப்புற்றவள். அவளே இன்னோர் ஆணுக்குத் துணைவி, மனைவி என்றாகிய நிலையில், அவனுக்கும் உள்ள சிறப்பிலும் இணைந்த சிறப்பினளாகித் தன் தனித்தன்மையை இழந்து, அவனொடு இணைந்த தன்மையினளாகிப் போகின்றாள் என்க.

அக்கால், அவளின் தனி இயக்க நிலைகளிலும் மாறுபாடும், வேறுபாடும் தோன்றத் தொடங்குகின்றன. என்னை? அவளுக்காக மட்டும் இயங்கியவள் அவனுக்காகவும் இயங்க வேண்டியுள்ளதன்றோ? அதேபோல், அவளின் தனியுடல், அவளுக்கு மட்டுமே சொந்தமாயிருந்த உடல், அதன் தனித்தன்மையை இழந்து, அவனுக்கும் சொந்தமாகிப் போகின்ற தன்றோ? அதேபோல், அவளுக்காக மட்டுமே எண்ணிய உள்ளம், சிந்தனை செய்த அறிவு இனி அவனுக்காகவும் இணைந்து எண்ணவும், இணைந்து சிந்திக்கவும் ஆகின்றன அல்லவா?

எனவே, இந் நிலைகளிலெல்லாம், அவள் தன் தனித்தன்மைகளை இழந்து ஒரு கூட்டுடைமை நிலைக்கு ஆளாகிவிடுகின்றாள் என்க. இவ்வடிப்படையில் ஒரு பெண் வேறு, ஒரு மனைவி வேறு என்றாகிவிடுகிறது. என்னை? பால் திரிந்து தயிராகிய பின்றை, பால் வேறு தயிர் வேறாகுமேயன்றித் தயிர் பாலாகாது என்க. இதே நிலை ஓர் ஆணுக்கும் ஒரு கணவனுக்கும் பொருந்தும் என்க. மாந்தப் பிறவியில் உள்ள அத்தனை வாழ்வியல் கூறுகளுக்கும் இருவரும் ஒரே தகுதியில் உடன்பட்டவர்களே என்க!

இங்கு இன்னோர் உண்மையும் தெளியற்பாலது. அஃது ஒரு பெண் ஓர் ஆணின் நுகர்ச்சிக்கு உரியவளாகின்றாள், அதனால் அவள் அவனின் அடிமை, அடக்கம் என்பது தவறு. ஏனெனில் அப்பெண்ணைப் போலவே, அவ்வாணும் ஒரு பெண்ணின் நுகர்ச்சிக்கும் உரியவனாகின்றதும் உணர்தல் வேண்டும். அக்கால், அவனும் அவளின் அடிமையோ அடக்கமோ ஆகான். இரு இயக்கங்களும் தனித்து இயங்குதல் வேறு; இணைந்து இயங்குவது வேறு. இரண்டு தன்மைகளும் இணைந்து இயங்கும் பொழுது, அவ்விரண்டினது தனித்தன்மைகளும் சிதைக்கப்படுகின்றன என்க. எனவே,