பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

194



பெருமையுடைய குணங்கள், உண்மையான அன்புணர்வும், கணவர் நலன்களிலும் முயற்சிகளிலும் அக்கறையும் ஆர்வமும், பெரியோர்மாட்டும் சிறியோர்மாட்டும் வேறுபாடற்ற பேணுதல் தன்மையும், குடும்ப முன்னேற்றத்திற்கு ஒத்துழைக்கும் ஈடுபாடும், விருந்தோம்புகின்ற நல்லுணர்வும், பொதுநலவுணர்வாகிய அறவுணர்வும் போல்வன. இவ்வுணர்வுகள் இயற்கையாய் அமைய வேண்டுமாகலின் மாண்புடையவை - பெருமையுடையவை - எனப்பெறுவன.

பெருமையுடைய நல்ல செயல்கள், தூய்மை கடைப்பிடித்தலும், இனிமையும், அன்பும் தலழப் பேசுதலும், பண்பும் ஒழுக்கமும் தோன்ற இயங்குதலும், இடம், பொருள், ஏவல், காலம் அறிந்து செயல்படுதலும், சமையல் திறனும் போல்வன.

இவ்விருவகைத் தன்மைகளும் கொண்டவள் மாண்பு - பெருமை உடையவளாவாள்.

2. தற்கொண்டான் - தன்னை மணந்துகொண்ட கணவன்.

3. வளத்தக்காள் - தன் கணவனின் வளங்களுக்குத் தக்கபடி இணைந்து இயங்குகின்ற தன்மை உடையவள்.

வளங்களாவன - உடல் நலம், கல்வி, ஏற்கனவே அமைந்த செல்வநிலை, இனி, புதுவதாக வரும் வருவாய் முதலியன.

இவற்றுக்குத் தக்கபடி இணைந்து இயங்குதல் தன்மையுடையவள். மனைத்தக மாண்பு, மணந்துகொள்ளுமுன் இயற்கையாக அமைந்த பெருமைக் குணங்களும் செயல்திறன்களும்.

வளத்தக்காள் தன்மை, புதுவதாக மணந்து கொண்ட கணவனின் ஏற்கனவே அமைந்த நலன்களுக்கும் வளங்களுக்கும் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் திறனாகும்.

இதனால், தன் தனித்தன்மையை இழத்தல் வேண்டாது அவனின் பொதுத்தன்மைக்குத் தக இணைந்து இயங்குதலாகும்.

அஃதாவது, தன்னைக் கொண்டவனின் உடல் நிலைக்கு ஏற்பவும், கல்வியறிவுக்கு ஒப்பவும், செல்வத்தன்மைக்கு உகந்தபடியும், வருவாய்க்கு ஒத்தபடியும், தன் செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளுதல் - இதற்கு முன்னர்த் தான் பிறந்து வளர்ந்த இடத்தில் இந்நிலைகளெல்லாம் வேறு வகையாக இருந்தாலும், தான் அவற்றுக்கு ஏற்ப இயங்கியிருந்தாலும், திருமணம் ஆகிய பின்னைத் தான் புகுந்த இடத்திற்கேற்ப அந் நடைமுறைகளில் சிற்சில மாறுபாடுகளைச் செய்து தன் மனநிலை, இயக்க நிலைகளைப்-