பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

196


௫௨.மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

 எனைமாட்சித் தாயினும் இல்.

52

பொருள் கோள் முறை :

இல்லாள்கண் மனைமாட்சி இல்லாயின்
வாழ்க்கை எனை மாட்சித்து ஆயினும் இல்.

பொழிப்புரை : இல்வாழ்க்கைத் துணையாக அமைந்த ஒருத்திக்கு (முன் சொல்லப்பெற்ற) மனையறத்திற்குரிய பெருமைமிக்க தகுதிகள் இல்லாமற் போமாயின், அவளைக் கொண்டவனுடைய வாழ்க்கை (முற்கூறிய பெருமை) வளங்கள் என்ன வகையினவாக இருப்பினும், அவை இல்லாதவை (போலவே) ஆகும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. மனைமாட்சி - முன்குறடபாவில் கூறப்பெற்றவாறு மனைவிக்குரிய இயற்கையான பெருமைக் குணங்களும், செயல்திறன்களும், மாண் - பெருமை; மாட்சி - பெருமைக்குரிய பண்பு நலன்கள்.
2. எனை மாட்சித்து ஆயினும் இல் - முன் குறட்பாவில் கூறியவாறு, அவளைக் கொண்டவனுடைய வாழ்க்கை என்ன வகையான வளங்கள் கொண்டதாக இருப்பினும், அவை இல்லாத வாழ்க்கை போன்றதாகவே இருக்கும். அஃதாவது, அவை பயனற்றவையாக ஆகிவிடும்.
3. இல்வாழ்வானுடைய தகுதிகள், பெருமைகள் அனைத்தும், இல்லாளுடைய இயற்கைக் குணங்கள், செயல் திறன்களைக் கொண்டே பயனுள்ளவையாக இருக்கும். அவை இல்லெனில், இவையும் பயனில்லாமற்போகும் என்றார்.

௫௩.இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை.

53

பொருள் கோள் முறை :

இல்லவள் மாண்பு ஆனால், இல்லது என்;
இல்லவள் மாணாக்கடை உள்ளது என்.