பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199

அ - 2 - 2 - வாழ்க்கைத் துணைநலம் - 6


மனவுறுதிப்பாடும் இருக்குமாயின் அவளின் பெருமை இன்னும் சிறப்புற்றிலங்கும் என்றார் என்க.

– இவ்விடத்து "A Virtuous woman is a crown to her husband' என்னும் ஆங்கிலப் பழமொழி நினைதற்குரியது.

2. கற்பு என்னும் திண்மை - கற்பு என்று கூறப்பெறும் மனவுறுதி.

1. கல் + பு - கற்பு. கல்போலும் உறுதி, ‘பு’ பண்புப் பெயர் ஈறு - கல் போலும் உறுதியான ஒருமைமனநிலையுடன் இருப்பது.

2. கற்பு 'ஒருமை மகளிர்’ என்று பிறிதோரிடத்தும் (974) கூறுவார். கல்வி கற்பிக்கப் பெற்றது. ஒரு பெண் மணமான பின் தன் கணவனொடு எவ்வெவ்வாறு நிறைவுற வாழ்தல் வேண்டும் என்று தன் தாய் தந்தையரால் கற்பிக்கப் பெறும் நெறி நடைமுறை, ஒழுகலாறு ஆகும்.

மணமாகாத பெண்ணுக்குரிய நடைமுறை வேறு. அது பொதுவானது. மணமாகிய பெண்ணுக்குரிய நடைமுறை வேறு. அது சிறப்பானது. இஃது ஆணுக்கு அடங்கிய அல்லது அடிமைப்பட்ட நிலையன்று. கணவனக்கு உரியாளாகிய பின்னை, அவனுடன் உடல், மனம், அறிவு, ஆகியவற்றால் இணைந்து வாழும் ஓர் உரிமை உறவு நெறி. இஃது ஏற்கனவே தாம் பெற்ற பட்டறிவுகளால் பெண்ணுக்குரியாராகிய பெற்றோர் உற்றோரால் பெண்ணுக்கு உரைக்கப் பெறுவது கற்பிக்கப் பெறுவது என்க.

'கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோர் பெட்கும் பிணையை ஆகு என’

- அகம் - 86. 13-14.

3.உண்டாகப் பெறின் - இம்மனவுறுதியும், கற்பறிவும் படிப்படியாக ஒரு பெண்ணுக்கு உண்டாவது ஆகலின், உண்டாகப் பெறின் என்றார். உண்டாகப் பெறின் - உண்டு ஆகுதல் பெறின் இனி, தானே உணடாவதுடன் பெற்றோராலும், அவர் போலும் பிறப்புறவோர் தம்மாலும் உண்டாக்குதலும் உண்டு. ஆகையால் அதற்கும் இச்சொற்பொருள் பொருந்து மென்க

உண்டாக்குதல் - உண்டு எனும்படி உருவாக்குதல்
உண்டாகுதல் - உண்டு எனும்படி உருவாதல்,

- இச் செய்வினை, செயப்பாட்டு வினைச்சொற்கள் இரண்டிற்கும் 'உண்டாகப்பெறின்’ என்னும் பொதுச் சொல்லமைப்புப் பொருந்தும் என்க.

- கற்பு - பெண்ணின் மன ஒருமைக்கும் உறுதிக்கும் ஓர் இடுகுறிச் சிறப்புச் சொல்லாக இலக்கிய வழக்கில் வேரூன்றிவிட்ட தென்க.