பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

215

அ - 2 - 3 - மக்கட்பேறு - 6


'புத்' என்னும் நிரையத்திற்கு (நரகத்திற்குப் போகாமால், பெற்றோரைக் காப்பதால், சமசுகிருதத்தில் 'புத்திரன்' என்று பெயர் வந்ததாக ஆரியவியலார் . (Put or Pud-hell in which the Childless are condemned-ManusX 138 Monier Williams)

இந்தப் ‘புத்திரர்’ என்னும் சொல்லிலிருந்தே 'புதல்வர்' என்னும் சொல்லும் வந்ததென்றும், அதுவும் வடசொல் என்றும் வடநூலார் கருதுவர்.

ஆனால் புதல்வன், புதல்வி, புதல்வர் ஆகிய மூன்று சொற்களும் தூய்தமிழ்ச் சொற்களே.

புது - புதல் தோன்றுதல்
புதல் - புதல்வன் புதிதாகத் தோன்றியவன்.

எனினும், நூலசிரியர் இவ்வதிகாரத்திலோ, இந்நூலின் வேறு இடங்களிலோ, புதல்வர் என்னும் சொல்லைக் கையாளவில்லை. அனைத்து இடங்களிலும் ஆண், பெண் பொதுச் சொல்லாகிய மக்கள் என்னும் சொல்லையே குறிப்பர்.

ஆனால், இவ்வதிகாரத்துள், சில குறட்பாக்களில் வரும் மகன், மக்கள் சொற்களையும் உள்ளடக்கிய ஒன்பது இடங்களிலும், புதல்வன், புதல்வர் என்னும் சொற்களையே பொருளாகப் பயன்படுத்துவார், பரிமேலழகர்.

இதன்வழி, அவர்க்குத் தமிழ்மொழியைவிட வடமொழி மேல் உள்ள பற்றையும், தமிழியலைவிட ஆரியவியலின் மேல் உள்ள அழுத்தமான ஈடுபாட்டையும் கண்டு கொள்க.

மேலும், பரிமேலழகர் இவ்வதிகாரத்திற்குத் தரும் முன்னுரையில்,

"இரு பிறப்பாளர் மூவரானும், இயல்பாக இறுக்கப்படும் கடன் மூன்றனுள், முனிவர் கடன் கேள்வியாலும், தேவர் கடன் வேள்வியாலும், தென்புலத்தர் கடன் புதல்வரைப் பெறுதலாலும் அல்லது செலுத்தப்படாமையால், அக் கடன் செலுத்தற் பொருட்டு நல்ல மக்களைப் பெறுதலாம்".

-என்று கூறுவது, முற்றும் வேதமதக் கொள்கைகளை நிலைநாட்டுதல் வேண்டியும், ஆரிய மதவியலைச் சார்ந்ததாகவே இந்நூல் எழுதப் பெற்றதென்று பிறர் கருத வேண்டியுமே என்க.

இதில், இரு பிறப்பாளர் மூவர் என்றதால், பூணுல் அணியும் பிராமணர், சத்திரியர், வைசியர் மட்டுமே கூறப்பெற்றுப், பூணுல் அணியாத சூத்திரரை மாந்தராகவே மதியாத நிலையைக் கூறினார். தென்புலத்தாரையும் பிதுர்களாகவே கருதினார். இவ்வகையில் ஆரியவியலை நிலைநாட்ட முயல்கிறார். இக்கொள்கை ஆரியவியலை வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தும் மனுதர்மத்துள் பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளது.