பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/246

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

232


- அதே போல், உடன்பிறப்புகள் உறவு முறியும் பொழுதும், அவ்வுரிமை மறுக்கப்படுகிறது.

-இனி, பெற்றோர் கொண்டாடும் அதே உரிமையைப் பிள்ளைகளும் கொண்டாடலாம். அவர்களுக்கு இவர்கள் உரிமை (ப் பொருள்) என்கிற பொழுது, இவர்களுக்கும் அவர்கள் உரிமையாகி விடுகின்றனர்.

அவர்களும் என் அன்னை, என் தந்தை என்னும் உரிமை கொண்டாடலாம்.

- இனி, அந்த உரிமை போல, தந்தை தாயர் உடைமைகளைப் பிள்ளைகளும், பிள்ளைகள் உடைமைகளைப் பெற்றோரும், தங்கள் பொருள் என்று சொல்லிக் கொள்ளுதல் இயலாது; ஏனெனில் அவரவர்களின் உடல் உழைப்பால் வருவது; எனவே, அஃது உடைமை என்னும் விளக்கத்தை அடுத்த கருத்துத் தொடரில் கூறுவார்.

3.அவர் பொருள் தம்தம் வினையான் வரும்: - மற்று, அவர் அவர் பொருள் என்று உடைமை நிலையில் கூறப் பெறுவன எல்லாம் அவரவர் செயலால் - பல்வகை உடலுழைப்பால் - வருவன.

- ஈண்டு அவர் பொருள் என்றது உடைமைப் பொருளில் என்க. - அவர் என்று மட்டும் கூறினும், அவரவர் என்றே பொருள்.

- வினை என்பது செயல்; உடலின் பல்வகை உழைப்பு: அறிவுழைப்பும் இதில் அடங்கும்.

மற்று, 'அவர்' என்பதற்கும், 'வினை' என்பதற்கும் வேறுவேறு உரையாசிரியர்கள், அவரவர் காணுதலுக்குத் தக்கபடி, வேறுவேறு பொருளுரைப்பர். அவை, மதஞ் சார்ந்த மடமையும், உரிமையையும் உடைமையையும் பிரித்தறியா துட்பமின்மையும் கொண்டனவாகலின், பொருந்தா உரையென்க. 'வினை' என்பதற்கு வேதமதவழிப் பொருள் கொள்ளும் பரிமேலழகர், தம் இயல்பான் ஈண்டும் பிழை செய்தார்.

- முன் கருத்துத் தொடரில் வந்த 'என்ப' என்னும் சொல், இரண்டுக்கும் பொது முடிபு தருவது.

- ஈண்டு, அவரவர் உழைப்பால் ஈட்டும் உடைமைப் பொருள்கள் அவரவர்க்கே உரியவாகும் என்பதும், அப் பொருள்களைப் பிறர்க்கு மாற்றினாலன்றி, அவை பிறர்க்கு உடைமையாகா என்பதும் கூறப் பெற்றன.