பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/249

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

235

அ - 2 - 3 - மக்கட்பேறு - 6

பொழிப்புர தம்முடைய மக்களின் சிறுகைகளால் துழாவி அளையப் பெற்றது எளிய கூழுணவே ஆயினும், அது பாற்சோற்றினும் மிகுந்த சுவை தருவதாகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. இக்குறள், பரிமேலழகர் முதலியர் முறை வைப்பில் 64ஆவது ஆகும். குழந்தையின் அமர்தல் நிலை நோக்கி, முன்னதன் பின் இது வைக்கப் பெற்றது.

2. தம் மக்கள் சிறு கை அளவிய கூழ்: தாம் பெற்றெடுத்த மக்களது சிறு கையால் அளாவப் பெற்ற கூழுணவு.

- தம் மக்கள் என்றதால், பிறரது மக்களைத் தவிர்த்தார், அவரளாவுதற்கு வாய்ப்பின்மையும் அவ்வாறு வாய்த்தவிடத்து அத்துணைச் சுவையின்மையும் கருதி.

- சிறுகை என்றதால், தம்முடையரேனும், வளர்ந்த நிலையில் உள்ளவரல்லாது, இளந்தை நிலையில் உள்ளவரைக் குறித்தார். பிட்டுப் பிதலும் எடுத்தலும் இறைத்தலும் வாயிடுதலும் முதலியன செய்தல்.

'வண்ணச் செஞ்சிறு கைவில் அனைத்தும்
வளிவாய்க் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன்'
- திருவாய்மொழி.

- பரிமேலழகர் உரையில் காட்டப் பெற்ற 188 ஆம் புறச்செய்யுள் அடிகளுள், நெய்யுடை அடிசில் என்று வருவதானும், பாவாணர் உரையில் காட்டப் பெற்ற நளவெண்பாச் செய்யுளில் இன்னடிசில் என்று வருவதானும், அக் காட்டுகள் பொருந்தா.

கூழ் என்றது. பொதுவாக உணவைக் குறிப்பதேனும் அளவிய என்று வருவதால், அது எளிய நீருணவையோ, குழைய வைத்த கூழையோதான் குறிக்கும். குழைதல் கூழ்.

- மேலும் குழவியின் சிறுகை யளாவலால் பாலுணவிலும் சுவை கூடும் என்றதால் அது, எளிமையுணவே என்க.

- பரிமேலழகர் சோறு என்றதும், பாவாணர் அதனைக் குழைக்கப்பட்ட சோறு என்றதும், பிறர் பொதுப்பட உணவு என்றதும், சரியல்லவென்க.