பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

246


உயிர் தளிர்ப்பத் தீண்டல் (1106) என்னும் குறளிலும் நூலாசிரியர் இதனைக் குறிப்புக் காட்டுவர். இன்பத்தின் பின் ஏற்படும் அமைதித் தெளிவே அறிவு. அது மலரின் தேன் போன்றது. அவ்வறிவு வளர வளர, அன்புணர்வும் திண்மையும், உண்மையும், நுண்மையும், கூர்மையும், விரிவும், விளக்கமும் எய்தி, உயிர்களின் உறவுணர்வாகவும் அறவுணர்வாகவும் வளர்ந்து பெருகி, இருமை நீங்கி, ஒருமையுற்று, இறைமையாக நிலைகொள்கிறது.

இதை விரிக்கிற் பெருகுமாகலின், இதனளவில் நிறுத்தி, அன்புணர்வு உலகியல், வாழ்வியல் நிலைகளில், எவ்வெவ்வகையில், எவ்வெம்முறையில் இயக்கம் கொள்கிறது என்பதை இவ்வதிகாரத்துள் நூலாசிரியர் கூறும் கருத்துகள்வழி விளக்குவாம்.

அன்பின் இயல்பு என்பதைப் பலரும் பலவகையாகவும் உணர்ந்திருந்தாலும், அதன் செயல்தன்மை இன்ன வகைத்து, இன்ன எல்லையுடையது என்று உணர்த்துதலும், உணர்தலும் கடினம் என்க. 'அன்பெனதொன்றின் தன்மை, அமரரும் அறிந்த தில்லர் என்றார் கம்பரும்.

இனி, அன்பே காதலாகவும், பாசமாகவும், பற்றாகவும், பத்திமையாகவும், நட்பாகவும், உறவாகவும், அறமாகவும், அருளாகவும், இறைமையாகவும் வளர்ச்சி பெறுகிறது என்பர் மெய்யறிஞர். இறைமையின் ஒரு கூறு அன்பும் ஒரு கூறு அறிவும் ஆகும். அன்பும் அறிவுமே அறம். அறமே உலகம்; உலக இயக்கம். அன்பே இறைமை, அறிவே இறைமை என்பது சமயம்.

இத்தகைய உயிர்ப்பு சான்ற அன்பு பொதுவாக உயிர்களிடத்தும், சிறப்பாக மக்களிடத்தும் கால்கொண்டு, வாழ்வுறுப்பாகி, பலவகையான இன்ப துன்பங்களுக்குக் கரணியமாகி, மக்களின மேம்பாட்டை இயக்கிச் செல்கிறது.

இவ்வன்புணர்வே இல்லறத்திற்கு முதலும் ஊதியமும் ஆகும். இது, கணவன் மனைவியிடைக் காதலாகி, அவர்களை இணைவித்து, அவர்களை மக்களைப் படைக்கும் படைப்பாளர்களாக்கி, அவர்களின்வழி உலகை உறவாக்குகிறது.

மக்களைப் பெற்று வளர்க்கும் பொழுதே அன்புணர்வு மலர்ந்து மணம் பரப்புகிறது. காய்த்துக் கனிவு எய்துகிறது. மக்கட்பேறின்றி அன்பை முழுவதும் உணர்தல் அரிதாம் என்னும் மெய்யறிவியல் உண்மையைக் கருதியே, இவ்வதிகாரத்தை மக்கட்டேறு என்பதன் பின்வைத்தார் என்க.

இனி, கணவன், மனைவி, மக்களை அடக்கிய குடும்ப உணர்வையும் எல்லையையும் தாண்டிப், பிறருடன் பழகவும், உறவாடவும் ஒர் இணைவு உணர்வாக இருப்பதே அன்புணர்வாகலான், அதனை ஈண்டு உணர்த்த முற்பட்டார் என்க.