பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை

41


Psychology) சார்ந்தவை என்க. எனவே, அவை மக்கள் நலச் சிந்தனையாளர்களால் கட்டாயம் கருதப்பெற வேண்டியவை என்க.

இறையுணர்வு எதற்கு?

இனி, உறுதியான அறிவு விளக்கமற்ற, அறிவியலால் இன்றுவரை மெய்ப்பிக்கப்பெறாத, வெறும் கருத்தியல் கோட்பாடாக (Conceptional theory)உள்ள இறையியல் கருத்துகளுக்கு நாம் ஏன் மதிப்பளிக்க வேண்டும், அவற்றில் ஏன் கவனம் செலுத்துதல் வேண்டும், அவை பற்றி நாம் ஏன் கவலைப்படுதல் வேண்டும் என்றெல்லாம் பலரும் வினாக்கள் எழுப்பலாம். ஒரு மக்களியல் சார்ந்த, மக்கள் மனவியல் அடிப்படையான, வலிவான, வாழ்வியலைப் பற்றிக்கொண்டுள்ள, காலங் காலமாய்த் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்ற ஒரு கருத்தை அவ்வளவு எளிதில் மறுத்து விடுதல் என்பதும், அதில் கருத்துச் செலுத்துதல் கூடாதென்பதும், அது பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்பதும், மக்கள் நலவியலில் ஒழுக்கவியலில் கருத்துக்கொண்டு உழைக்கும் அல்லது கருத்தறிவிக்கும் எவருக்குமே நலமாகா. இறைமறுப்புக் கருத்தையும் பின்பற்ற ஒரு குழுவோ கூட்டமோ எக்காலத்தும் எவ்விடத்தும் எந்த மக்கள் கூட்டத்தும் இருக்கவே செய்யும். அதனால், அக்குழுவால் கூறப்பெறும் எக்கருத்தும் சிறந்தது, ஏற்றது, உண்மையானது, மக்கள் நலத்துக்கு உகந்தது என்று ஆகிவிடாது.

இல்லையும் இருக்கிறதும்!

எனவே, இறையியல் கருத்தை நாம் தவறு என்றோ மூட நம்பிக்கை என்றோ, (அறிவியலின் அனைத்துக் கூறுகளிலும்கூட மூடநம்பிக்கைகள் உண்டு) பகுத்தறிவுக்குப் பொருந்தாதது என்றோ, அறிவியல் அடிப்படையில்லாதது என்றோ, ஏமாற்று நிறைந்தது என்றோ, எவரும் எந்நிலையிலும் தள்ளிவிடல் அறிவுடைமை ஆகாது என்க. இத்தனைக் கூறுகளும் ஒரு கருத்தியல் நிலைக்கு வேறு வேறு நிலையில் பொருத்தமுடையனவாகவும் இருக்கலாம்; பொருத்தமற்றனவாகவும் இருக்கலாம். ஆனால் அறிவியலையோ, பகுத்தறிவியலையோ அடிப்படையாகக் கொண்டுதான் மக்கள் மனவியல் இயங்குகிறது என்பதை எவரும் கூறிவிட முடியாது. அது தனியாகவும் இயங்குகிறது. இன்னும் உண்மையாகவும், தெளிவாகவும், உறுதியாகவும் சொல்வதானால், மக்கள் மனவியல்தான், இவ்வுலகின் அனைத்து அறிவியல், செயலியல் (Operational or Functional), ஒழுக்கவியல் நடைமுறைக்கும் பொருந்தும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடவுள் இல்லை என்று சொல்வதும் கூட ஒருவகை மனவியல் உண்மைதான் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அஃது, ஒரு தந்தையைப் பார்த்து, அவர்மேல் ஏதோ ஒரு வகையில் வெறுப்புற்ற அல்லது சலிப்புற்ற மகன் ஒருவன், எனக்கு எவரும் தந்தையுமில்லை; நான் எவர்க்கும் மகனுமில்லை என்று சொல்வது போலும் ஓர் எதிர்மறையுணர்வாகும்.