பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ-1-1-அறமுதல் உணர்தல்

61


உணர்வுநிலை, அறிவுநிலை ஆகியவற்றைப் பொறுத்து, வெவ்வேறு மாத்திரை அளவிலும், ஒலியளவிலும் (உரத்தல், கரகரத்தல் முதலியன போல் மாறுபாடுகள் உடையதாக இருக்கும் என்க.

இறையுணர்வும் இத்தகையதே. என்னை, முருகன் என்னும் இறைமைக் கூறாகிய ஒரு கடவுளை ஒவ்வொருவரும், அவரவர் உணர்வுநிலை, அறிவுநிலை, உடல் நிலை, கால நிலை ஆகியவற்றுக் கேற்பவே உணர்தல் முடியும்; பயன்பெறுதல் முடியும் என்றார்,

இனி, அகர எழுத்தேகூட வரிவடிவில், தொடக்கத்தில் இருந்த நிலைக்கும் இன்றுள்ள நிலைக்கும் எத்தனையோ மாறுதல்கள் அடைந்துள்ளன. ஆனால், ஒலிவடிவில் ஒன்று தான். அதுபோல் இறையுணர்வு தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஒன்றுதான். வடிவங்கள் மாறுதல் அடைந்து வந்துள்ளன. இதே இறையுணர்வு வேறுவேறு மக்களிடையும் மதங்களிடையும், உணர்வில் ஒன்றியும், பருப்பொருளாய பெயர்களிலும் வடிவங்களிலும் மாறியும் இருக்கின்றன. வடிவங்கள் இன்னும்கூட மாறலாம். ஆனால் அகரவொலி என்றும் ஒன்றாகவே இருப்பதுபோல், இறையுணர்வும்

என்றும் ஒன்றாகவே இருக்கும் என்க.

'அ'கரம் பிற உயிரெழுத்துகளிலும் மெய்யெழுத்துகளிலும் உயிர்மெய்யெழுத்துகளிலும் ஒலியானும் ஒளியானும் ஊடுருவி நிற்பதுமன்றித் தனித்தும் நிற்பதுபோல், இறைவனும் உலகிலுள்ள எல்லா உயிர்களிலும், மெய்களிலும் ( மெய்கள் என்பவை ஒலியற்ற இயங்குதலற்ற கல், மண் போன்ற பருப்பொருள்கள்), உயிர் மெய்களிலும் நுண்ணுயிர் முதல் மாந்தன் வரை) ஒலியானும், ஒளியானும் ஊடுருவி நிற்பதுடன், தனித்தும் நிற்கிறான் என்பதையும் உணர்த்தினார். (அ எல்லா எழுத்துகளிலும் அதன் ஒலியமைப்பிலும் ஒளி உருவ அமைப்பிலும் ஊடுருவி நிற்பதை ஏதோ ஒரு வகையில் அதன் தொடக்க வரைவோ, இடை வரைவோ, இறுதி வரைவோ, கூடக் குறையப் பொருந்தி இருப்பதை, அவ்வெழுத்துகளை உற்று நோக்கியும் பிற எழுத்தாய்வு நூல்களானும் உணர்ந்துகொள்க)

- இவ்வாறு 'அ'கரம் பிற எழுத்துகளில் கலந்து நிற்பதை நுண்ணறிவினரே உணர்வது போல், நுண்ணறிவு (மெய்யறிவு) உடையோரே, இறையுண்மையையும், அது பிற உயிர்களோடும் பொருள்களோடும் இரண்டறக் கலந்து நிற்பதையும் உணர்ந்து கொள்ள முடியும் என்க.

இனி , எழுத்துகளிற் போலவே எழுத்தமைப்புகளிலும் சொற்களிலும் சொல் தொடர்களிலும்கூட மெய்ப்பொருள் உண்மைகள்