பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வெளியீட்டுரை

விளக்கினார்கள். அக்கால் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிவந்த திரு. வடிவேல் இராவணன், மந்தைவெளிப் பள்ளித் தமிழாசிரியர் திரு. தமிழ்நாவன் போன்றோர் ஒரிரு திங்கள் தொடர்ந்து மாலை நேரங்களில் படியெடுத்தும் வகைப்படுத்தியும் உதவி செய்தனர்.

நாள் எந்நேரமும் உரையைப் பற்றிய எண்ணமும் பேச்சுமாகவே ஐயா இயங்கி வந்தார்கள். இதற்கிடையில் 1982 இறுதியில் திரு. இளமாறன் அவர்கள் பவானியில் திருக்குறள் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று அமைத்தார். இச்சொற்பொழிவின் பின் இந்நூல் விரைவில் அமைவதற்கான சூழல் அமைந்ததெனினும் நடைமுறைப் போக்கில் அச்சூழல் நில்லாமற் போனது.

இதற்கிடையில் ஐயாவின் மகளான தங்கை செந்தாழை பட்டம் முடித்து விட்டில் இருந்த காலத்தில் இப்பணிக்குத்துணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர்க்கும் மணவாழ்க்கை அமைக்கப்பட்டது.

அதன்பின் சரியான துணைச் சூழல்கள் வாய்க்காமலும் இல்லத்தில் ஏற்பட்ட சிற்சில சிக்கல்களாலும் உரை எழுதும் பணி தடைப்பட்டது. அதன்பிறகு அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. ஐயாவின் பணி இதழ் வெளியீடுகளிலேயே தொடர்ந்து இருந்தது. இதற்கிடையில் 1991 சூன் மாதம் செயலலிதா ஆட்சியின் கொடுமையான சூழல் தமிழகத்தில் தொடங்கியது. ஐயா அவர்கள் மிகவும் இச்சூழலால் தமிழினத்தை எண்ணி வருந்தியிருந்தார்கள். அத்துடன் ஐயாவின் கண்களில் கதிர்முறையில் அறுவை செய்ய நேர்ந்தது.

இவ்விரண்டு அழுத்தமான நிகழ்வு எண்ணங்களோடு தென்மொழி அச்சகம் சென்றிருந்தபோது, தென்மொழி அச்சகப் பெயர்ப்பலகை வேறு காற்றினால் வீழ்ந்திருந்தது கண்டு திடுக்குற்றார். இவைபோன்ற மனச்சுமையான எண்ணங்களோடு ஒருநாள் இரவு உறக்கத்தினிடையில் திடீரென்று விழிப்பு வந்தபோது திருக்குறள் உரையை முடித்துவிட வேண்டும் என்ற முனைப்புப் பீறிட்டு எழுந்தது.

இதன்படி முதலில் உரைச் சுருக்கத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்ற உந்துதலில் அதற்கான பணிகளை மும்முரமாகத் தொடங்கினார். தென்மொழியில் முன்வெளியீட்டுத் திட்ட அறிக்கைகள் வெளிவந்தன.