பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

அ-2-10 ஒழுக்கமுடைமை 14


4. இஃது, உயிரினும் ஒம்பப் படும் என்பதற்கான விளக்கமாய் அமைந்ததாகலின், அதன் பின்னர் வைக்கப் பெற்றது.

கங்ங. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். – 133

பொருள்கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை : ஒழுக்கம் உடைமையே குடும்ப அமைவுக்கும், குடியமைவுக்கும் குமுக அமைவுக்கும் காரணம். அதில் பிறழ்ச்சி தோன்றி இழுக்கம் நிகழுமாயின், அம் மூன்று அமைப்புகளும் கெட்டு, மக்கள் பிறவிச் சிறப்புத் தாழ்ந்து, அடுத்துள்ள விலங்குப் பிறவிநிலை ஆகிவிடும்.

சில விளக்கக் குறிப்புகள் : -

1. இஃது, அவ் வொழுக்க நிலையால் ஏற்பட்ட பொது அமைவுச் சீர்மைகளையும். அது தாழ்ந்து தவிரும் நிலையில் தோன்றும், விலங்கு நிலையையும் விளக்கியது. -

2. ஒழுக்கம் உடைமை குடிமை - ஒருவனின் தனியொழுக்க நிலைகளே, இல்லறமாகிய குடும்ப அமைப்பிற்கும், அதன் வழித்தாய குடிநிலை அமைப்பிற்கும், அதன் வழித்தாய குமுக அமைப்பிற்கும் காரணம்

தனியொழுக்கத்தின் அடிப்படையாகத்தான் இல்லறவியல் என்னும் குடும்ப அமைப்பு அமையும் இல்லெனில் இல்லற அமைப்புக் கெடும். என்னை:

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தம்தம் தனிநிலை ஒழுக்கத்தில் ஈடுபடும் பொழுதுதான் குடும்பப் பிணைப்பு கெடாமல் இருக்கும். அவருள் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ ஒழுக்கத்தைக் கடைப்பிடியாமல் போவராயின் அக் குடும்பம் சிதைவடைதல் உறுதி.

இனி, குடும்ப அமைப்புச் சிறந்து நின்றால்தான் குடியமைப்பும் சிதைவுறாமல் நிற்கும் அவ்வாறு அதுசிறந்து நின்றால்தான் குமுக (சமூக அமைப்புச் சிதர்வுறாமல் இருக்கும். எனவே, தனிநிலை ஒழுக்கமே குமுக அமைவிற்கு அடிப்படை என்க

-இத் தொடரில் மிகவும் கவனிக்கவேண்டிய சொல் குடிமை என்பது. குடி குடிமை. .