பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 11



அன்புடைமையான் விருந்தோம்பியும், இனியவை கூறியும் ஆற்றுவித்தார் செய்த நன்றியறிந்து போற்றிக் கொளல் நல்லறம் வழுவா இல்லறம் ஆகலின், அவற்றின் பின்னர் இது வைக்கப் பெற்றது, என்க.

உலகப் பொதுவுறவாண்மைக்கு இஃது இன்றியமையாத தாகலின் இது மறத்தல் கூடாதெனல் பொருட்டு அறிதல் என்னும் சொல் கூட்டி வலியுறுத்தினார் என்க. -

க0க. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 101

பொருள்கோள் முறை : இயல்பு

பொழிப்புரை ஒருவர், தமக்கு இதற்கு முன்னர் எவ்வுதவியும் செய்யாதிருந்த நிலையிலும், தாம் அவர்க்குத் தேவையான பொழுது தேவையான அளவில்) செய்த ஒர் உதவிக்கு, (இணையாக) இவ் வையகமும் வானகமுங்கூடச் செய்வது கடினம். .

‘சில விளக்கக் குறிப்புகள்: -

செய்யாமல் செய்த உதவிக்கு - ஒருவர், தமக்கு இதற்கு முன்னர்) எவ்வுதவியும் செய்யாதிருந்த நிலையிலும், தாம் அவர்க்குத் தேவையான அளவில் செய்த உதவிக்கு இணையாக,

செய்யாமற் செய்த உதவி’ என்பதில், உதவியினது பெருமையும், சிறப்பும், அருமையும் புலனாயின. செய்யாமல் என்னும் சொல் செய்தாரையும் பிறரையும் ஒருங்கே குறிக்கும். இதுவரை செய்யாத உதவி’ என்பதில் அவரையும், ஏதோ ஒரு காரணத்தால் செய்யவியலாத, செய்ய விரும்பாத அல்லது செய்ய அஞ்சிய’ என்பதில் பிறரையும் குறித்தது. -

பிறர் செய்யவியலாததை இவர் செய்தார் என்பதில் பெருமையும், அவர் செய்ய விரும்பாததை இவர் செய்தார் என்பதில் சிறப்பும், அவர் செய்ய அஞ்சியதை இவர் செய்தார். என்பதில் அருமையும் புலனாயினவாறு.

செய்தல்- நிகழ்த்துதல் ஆற்றுதல் -

- செயல் என்னும் பொருளில் வருகின்ற அனைத்துத் தமிழ்ச் சொற்களும் உழவை அடிப்படையாகக் கொண்டு வரும் விளக்கங்கள் முன்னரே (14-ஆம் குறள் விளக்கத்தில் காட்டப்பெற்றன). -