பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

25


அவரால் முடிந்தது அவர் உதவினார் என்றவாறே பேசுவது இயல்பாக உளளது.

இது பற்றி எண்ணித்தான், உதவியை அதன் அளவாக மட்டும் மதிப்பிட்டுவிடக் கூடாது; அவர் ஓர் இக்கட்டான காலத்தில் அதைச் செய்தார் என்பதையும், தாம் இதற்கு முன்னர் அவர்க்கு ஏதும் செய்யாமல் இருந்த நிலையிலும், அதை அவர் செய்தார் என்பதையும், மேலும், அவ்வுதவிக்கு ஈடாகத் தம்மிடம் எதையும் எதிர்நோக்காது அதைச் செய்தார் என்பதையும், அது சிறிய அளவில் செய்திருந்தாலும் அதைக் கொண்டுதான் தாம் பேரளவில் வளர முடிந்தது என்பதையும், ஆன இந்நால்வகைக் கோணங்களிலும் அதை மதிப்பிட வேண்டும் என்பதையும் முன்னர்க் கூறியவர், இதில் ஐந்தாவது கோணமாக, அதைப் பெற்றுக்கொண்டவரின் மனப்பண்பையும் பிற பெருமைப் பாடுகளையும் கொண்டு அவ்வுதவிக்குப் பெருமை உண்டு என்று கூறுவாா்.

வரை என்னும் சொல் அளவு என்னும் பொருள் தந்தது. அது மதிப்பீட்டு அளவு.

உதவி -உது என்னும் வேரடியாகப் பிறந்த சொல்.

உது சேய்மைக்கும் (அது) அண்மைக்கும் (இது) இடையீடு பட்ட சுட்டுச் சொல். இங்குச் சுட்டுப் பொருளையன்றிச் செயற் பொருளைக் குறித்தது. சேய்மையாக இருந்தவர் நம்மை நோக்கி வந்து இடையிடுபட்டு நிற்க, நாம் அவரை நோக்கிச் சென்று பரிமாறிக் கொள்ளும் நலனைக் குறித்தது. ஏற்ற இறக்கமில்லாத சமநிலை உறவை இது குறிக்கும். ஒருவர் நம்மை அவர்க்குச் சமமாகக் கருத முடியவில்லை யானால் நமக்கு அவரோ, அவர்க்கு நாமோ உதவிக் கொள்ளுதல் இயலாது. சமநிலையிலுள்ள இரண்டு நீர் நிலைகள் தடை தவிர்ந்தபோது, ஒன்றுடன் ஒன்று கலந்து பரிமாற்றம் நிகழ்வதுபோல் நிகழ்கின்ற நிலை

மேல்நிலையிலுள்ள ஒருவர், தாழ்நிலையிலுள்ள ஒருவர்க்குப் பரிமாறுதல் உதவி என்னும் பொருளது அன்று; அது கொடை அல்லது ஈகை அல்லது தருமம் ஆகும். மகிழ்ந்து கொடுத்தல் கொடை, இரக்கத்தால் ஈவது ஈகை, அறம் கருதித் தருவது தருமம் தருமம் தூய தமிழ்ச் சொல்லே. இதை வடநூலார் தர்மம் என்று திரித்து, அதற்கு அறக்கொடை என்றும் 'அறவொழுக்கம்’ என்றும் பொருள் கொண்டனர். பின்னர் அதற்கு வருண நிறப்பிரிவுக்கும் ஜாதிப் பிரிவிற்கும் பரிமாணப் பொருள் கொண்டனர். எ.டு. மதுதர்மம், நாரத தர்மம். ஜாதி - வடசொல், பிறப்பின்பால் வேறுபடுத்தப்பட்ட பிரிவு. ஜன் - ஜனி - (பிறப்பு) என்னும் வேரடியாகப் பிறந்த தமிழ்ச்சொல். ‘சாதி' - சாத்து என்னும் வேரடியாகப் பிறந்த தமிழ்ச்சொல். கூட்டம்