பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று பொருள்பட்டுத் தொடக்கத்தில் கூட்டத்தையும், பிறகு மக்கள், விலங்கு, நீர்வாழ்வன, பறப்பன ஆகியவற்றின் கூட்டங்களையும், பிறகு வணிகக் கூட்டத்தையும், (சாத்தன், சாத்துவான், மாசாத்துவான் என்னும் பெயர்களைக் கவனிக்க) (வணிகர்கள் ஓர் ஊரினின்றும் வேறுர்களுக்குச் செல்லும் பொழுது கூட்டம் கூட்டமாகவே செல்லும் வழக்கினர்) (சார்ந்து (கூடிச் செல்வதால் சார்த்து, சாத்து என வழங்கியது, அதன் பின்னர்ப் பிற தொழில் கூட்டங்களையும், பிரிவுகளையும், தச்சர், கொல்லர், தட்டார், பள்ளர் (வேளாளர்), பறையர் (பறையறைபவர்), துன்னர் தையலர்), படகர் படவர் செம்படவர் (படகு ஒட்டுபவர்), முதலியார் (படைமுதல்வர், பொருள் முதலீடு செய்து வணிகம் செய்பவர்), வேளாளர் (வேளாண் தொழில் செய்பவர்), குடவர் (குடம் செய்பவர். குடவர் - குசவர். குயவர். ட, சபோலி, (எ.டு) பிட்டு - பிச்சு சயபோலி, பையன்கள் பசங்கள்; முயல்-முசல், உயிர்-உசிர்) குறித்தது என்க. இதை மேலும் விரிக்கில் பெருகும்.

2.உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து : அது செய்யப் பட்டவரின்

பெருமைக்குத் தக்கவாறு மதிப்பிடப் பெறுவதாகும்.

- உதவி எவரும் எவருக்கும் செய்வதாகும். நல்லவர் ஒருவர் வேறு நல்லவர் ஒருவர்க்கு உதவுவது போலவே, தீயவர் ஒருவரும் இன்னொரு தீயவர்க்கும், திருடர் ஒருவர் இன்னொரு திருடர்க்கும், கொலைகாரர் ஒருவர் இன்னொரு கொலைகாரர்க்கும், கள்ளக்கடத்தல்காரர் இன்னொரு கடத்தல்காரர்க்கும், ஒழுக்கமில்லாதவர், இன்னொரு ஒழுக்கமில்லாதவர்க்குங்கூட உதவி செய்யலாம். ஆனால் அவ்வவ் வகையான உதவியெல்லாம் அவ்வவ் வகையில்தான் மதிக்கப் பெறும். ஆனால் நல்லவர் ஒருவர் பொதுத்தொண்டர் ஒருவர்க்குச் செய்யும் உதவி வேறு வகையில் மதிக்கப் பெறும். இன்னும் மேலே சென்று, நல்லவர் ஒருவர் அல்லது அறிவுநலமும் பொருள்வளமும் உள்ளவர் ஒருவர், மக்கள் நலத்துக்கும் முன்னேற்றத்திற்கும் உழைக்கின்ற அறிஞர்க்கும், பேரறிஞர்க்கும் அவரின் அறிவுழைப்பை மக்களுக்குப் பயன்படும் வகையில் பொருள். அளவிலோ செயல் அளவிலோ ஓர் உதவி செய்வதாக வைத்துக் கொண்டால், திருவள்ளுவப் பேராசானுக்கு ஏலேல சிங்கக் கப்பல் வணிகர் உதவியது போலவும், கம்பரது பாவியத் திற்தை வெளிக் கொணரும் வகையில், சடையப்பர் உதவியது போலவும், கழகப் புலவர் பெருஞ்சித்திரனார்க்குக் குமணன் உதவியது போலவும், ஒளவையாருக்கு அதியமான் நெடுமானஞ்சி உதவியது போலவும், பிற்காலப் புலவர்களாகிய சத்திமுற்றப் புலவர்க்குப் பாண்டியன் உதவியது போலவும், பார்வையிழந்த பாவலர் வீரஇராகவர்க்குச் சிங்கபூபதி என்னும் இலங்கையரசன் உதவியது போலவும், இக்காலத்து, இங்கிலாந்து, ஆங்கிலப் பேரகராதிப் பேரறிஞர்