பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

29



இனிக் கடன் தருவதும் ஒருவகையில் உதவி போலக் கருதப் பெறினும், அவ்வாறு கருதி உதவுவதும் கைம்மாற்றுக் கடன் போன்றதே. இதை ஆசிரியர் பெருமை உள்ளதாகக் கருதவில்லை என்பதை முன்னரே, 'பயன்துக்கார் செய்த உதவி நயன்துக்கின் நன்மை கடலின் பெரிது’ என்னும் (103) குறளில் வேறுபடுத்திக் கூறியுள்ளார். அது திருப்பிப் பெற்றுக் கொள்ளப் பெறுவதானால் அஃது உதவி என்னும் பெருமையைப் பெறாது. அது பயன் கருதிச் செய்ததாகிவிடும் என்பது அவர் கருத்து. அவர் முதலில் பயன் கருதிச் செய்யாமல் இருந்திருப்பினும், அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமிடத்து, அவர் அவ்வாறு கருதிச் செய்ததாகவே கொள்ளப்பெறும் என்பதால் அதற்குப் பெருமையில்லை என்றறிக. எனவே இதற்கு அப்பொருள் சாலாது.

எனவே, இங்குப் பெறுபவர் பெருமையளவே, அவ்வுதவியினது பெருமையும் என்க. பெறுபவர் உயர்ந்த தகுதிகள் உடையராயின், அவ்வுதவியும் உயர்வாகவே மதிக்கப்பெறும் என்னும் பொருளே ஆசிரியர் கருத்தாதல் வேண்டும் என்க.

- இக் கருத்தையே அவர் வேறுவேறு இடங்களில் வேறுவேறு வகையாக உணர்த்தியுள்ளதையும் இந்நூலுள் காணலாம்.

- ‘விருந்தோம்பல்' அதிகாரத்துள், பாவாணர் உரையுள் எடுத்துக் காட்டப் பெற்ற இனைத்துணைத்து என்னும் 87ஆம் குறளில், விருந்து பேணப் பெறுபவர் பெருமைக்கேற்ப விருந்தின் பயனும் அமைகிறது என்னும் பொருள், இக்குறளின் கருத்தை ஒட்டியதே.

- அடுத்துத் 'தெரிந்து செயல் வகை’ என்னும் அதிகாரத்துள் வரும்,

நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை

- 469

என்னும் குறளில், “ஒருவர் பண்பை ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் செய்யும் நல்ல செயல்களின் வழியும் தவறு உண்டாகும்” என்று இதே கருத்தை வேறு வகையில் கூறுவார். அஃதாவது உதவி செய்வது இங்குக் கூறப்பெறுகிறது. அங்கு நல்லது செய்வது பற்றிக் கூறப்பெறுகிறது. ஒருவர்க்கு நல்லது செய்வதும் உதவி செய்வது போலத்தான். எனவே உதவி யாருக்குச் செய்தால் நல்லது விளையும், யாருக்குச் செய்தால் சிறிது நல்லது அல்லது தீமை விளையும் என்று எண்ணிப் பார்த்துச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது . அவரது பண்பையும் பார்க்க வேண்டும் என்பார். நல்ல சால்புடையார் என்பதில் நல்ல பண்பும், அறிவுத்தகுதியும் அடங்கும் அன்றோ?

இனி 'வலியறிதல்' அதிகாரத்துள் வரும் -

'ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி’

- 477