பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

31



இதனுள் பயன்படுத்தப் பெற்ற எட்டுச் சொற்களுள், உதவி என்னும் சொல் மும்முறையும், வரைத்து என்னும் சொல் இருமுறையும் வந்து எண்ணிக்கையில் மூன்றைக் குறைத்து உதவி, வரைத்து, அன்று, செயப்பட்டார், சால்பின் ஆகிய ஐந்து சொற்களால் ஆக்கப் பெற்ற குறுங்குறட்பா இது என்று எண்ணி மகிழ்க.

இத்தகைய பிற ஆங்காங்குச் சுட்டப்பெறும்.

கoசு.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

– 106

பொருள்கோள் முறை:

மாசற்றார் கேண்மை மறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு துறவற்க.

பொழிப்புரை : தம்மிடம் முன்பிருந்த (ஒன்றோ சிலவோ ஆன மனத்தினதும் செயலினதுமான) குற்றங்களை (அறிவுறுத்தி) அற்றுப் போகச் செய்தவரின் உறவாண்மையை என்றும் மறத்தல் வேண்டா. அதே போல் தமக்கு ஒரு துன்பம் நேர்ந்த பொழுது ஆதரவு தந்து, அதை நீக்கிக் காத்தவரை விட்டு நீங்குதலும் வேண்டா.

சில விளக்கக் குறிப்புகள் :

1. நட்பு அதிகாரத்துள் வரவேண்டிய குறட்பா இது மிக நுட்பமான செய்ந்நன்றியறிதல் உணர்வின் முகாமை கருதி இதில் வைக்கப் பெற்றுள்ளது.

2. இதன்கண் பிறர் உதவி பெற்றார் மறவாதிருக்க வேண்டிய உணர்வும், துறவாதிருக்க வேண்டிய உணர்வும் ஒருங்கே கூறப்பெற்றதைக் கவனித்தல் வேண்டும். இவையன்றி இதனுள் இவ்வதிகாரத்தின் முன்னுள்ள குறட்பாக்களின் இல்லாத இரண்டு சிறப்பு நிலைகள் - கருத்துகள் கூறப்பெற்றுள்ளன. -

ஒன்று, ஓர் உதவியை மறத்தல் வேண்டா என்பது இரண்டு, ஓர் உதவியைத் துறத்தல் வேண்டா என்பது. அவையிரண்டையும் ஓரளவு விளக்கமாகப் பார்க்கலாம்.

3. மாசு அற்றார் கேண்மை மறவற்க - மாசு அறுத்தவர் உறவாண்மையை மறத்தல் வேண்டா.

- இதில் மாசற்றார், கேண்மை என்னும் இரண்டு சொற்களிலும் முன்னைய உரையாசிரியர் வேறு வேறு பொருள்களைக் கண்டனர்.