பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

33



- முதலில், மாசற்றார் என்னும் இணைச் சொல்லுக்கு அவ்வாறே பொருள் கொண்டால், குற்றமற்றவர் என்றுதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அதைப் பிரித்துப் பொருள் கொண்டால் வேறு பொருள் கிடைக்கும். அது மாசு + அற்றார் - மாசு அறுத்தவர் - அறச்செய்தவர் நீங்கச் செய்தவர் என்று பொருள் வரும்.உலகில் பெரும்பாலாரிடம் இயல்பாகவே, அறியாமை காரணமாகவோ, வளர்ந்த சூழல் காரணமாகவோ சில மனமாசுகளும் செயல்குற்றங்களும் ஒட்டிக்கொண்டிருக்கும். ஒன்று, அவர் மிகுந்த பொய்கள் பேசுபவராக இருக்கலாம்; அல்லது பிறர் பொருளைத் திருடும் பழக்கமுள்ளவராக இருக்கலாம்; அல்லது குடிப்பழக்கத்தைக் கைக்கொண்டவராக வளர்ச்சி பெற்றிருக்கலாம்; அல்லது தவறான முறையில் பொருள் சேர்க்கும் நோக்கத்தைக் கொண்டவராக விருக்கலாம்; அல்லது பெண்கள் வகையில் ஒழுக்கங் கெட்டவராக இருக்கலாம்; அல்லது குடும்பப் பண்பாடுகளுக்கும், நடைமுறைகளுக்கும் மாறுபட்டவராக இருந்து, அவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளாத முரட்டுப் போக்குக் கொண்டவராக இருக்கலாம். இவ்வாறு, உலகியலில் எத்தனையோ பெயர்கள், இங்குக் கூறப் பெற்ற வகையிலும், வேறு வகையிலும் மனவழியானும் செயல்வழியானும் மாசு கொண்டவராக குற்றமுள்ளவராக வளர்ச்சி பெற்று, அவற்றினின்று விடுதலறியா வேட்கையினராகவும், மீளத் தெரியாமல் அவற்றுள் சிக்கி அல்லது மூழ்கித் தவிப்பவராகவும் இருக்கலாம். இவ்வாறு எத்தனையோ தொகையினரையும் வகையினரையும் நாம் காணலாகும். அவற்றினின்று மீட்கப் பெறாத வரை, அவர்கள் அவற்றிலேயே தொடர்ந்து மேற்சென்று வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இயங்கித் தம் வாழ்வையே சிதறடித்துக் கொண்டும் பாழடித்துக் கொண்டும் இருக்கலாம். இவர்களால் அவர்கள் குடும்பத்தினர் படும் துன்பங்களும் துயரங்களும் கொஞ்சநஞ்சம் அல்ல.

- இத் தகவிலாரை நெருங்கி, அவரின் அகப்புற வுணர்வுகளைக் கண்டு காட்டி அறிவுறுத்தி அவர்கள்ை நல்வழிப்படுத்திய நிலைகளும் பலவாக நாள்தோறும் நடந்து வருவதும் உலகியலில் கண்கூடாகக் காணப்பெறும் நிகழ்ச்சிகளாகும்.

இவ்வாறு திருத்தமுற்றவர்களை நோக்கித்தான், அவ்வாறு தங்களின் மாசு அறுத்தவர்களை - குற்றங்களை உணர்த்திக் காட்டி நல்வழிக்குக் கொணர்ந்தவர்களை மறத்தல் வேண்டா என்று அறிவுறுத்தியது இக்குறளின் முற்பகுதி. இவ்வாறு அவர்களைத் திருத்தமுறச் செய்வதும் ஒருவகையில் - இன்னும் சொன்னால் பொருளுதவியைவிட மிகச் சிறந்த பேருதவியே அருளுதவியே ஆகும். இதுவும் செய்ந்நன்றி யறிதலின் பாற்படுவதே ஆகும்.