பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- இனி, அவ்வாறு உதவி செய்தவர் நண்பர் முதலிய அயலாராகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை; நெருங்கிய உறவினராகவும் இருக்கலாம்; மேலும், அவ்வுதவியும் பொருளாகவோ, செயலாகவோ தாம் இருக்க வேண்டும் என்பதில்லை; தம் வாழ்வு நிலையில் அக்கறையும் ஆர்வமும் கொண்டு, தம்மிடமுள்ள மனக் குற்றத்தையோ, செயல் குற்றத்தையோ அல்லது இரண்டு குற்றங்களையுமோ, போக்கிய அல்லது நீக்கியதாகவுமே இருக்கலாம். அதுவும் ஒருவகைப் பேருதவியே. அதைச் செய்தவர் அதைச் செய்பவர் உறவினரே. இன்னுஞ் சொன்னால் அத்தகைய உறவாண்மை உடையவர்களால்தான் இவ்வருஞ் செயலைச் செயதற்கியலும் மற்று நண்பர்களுக்கோ, தம் மேலாளுநர்களுக்கோ இச் செயற்பாடு கடினமாகவோ இயலாததாகவோ இருக்கலாம். என்னை? குற்றம் செய்து கொண்டிருப்பவர் அதனின்று நீங்கா விருப்பமும் பற்றும் ஈடுபாடும் கொண்டவராக இருப்பாராகலின், அவர், பிறர் அறிவுரைகளை ஏற்க வேண்டுவதானால் அவர் அவர்க்கு நம்பிக்கையும், நட்புணர்வுக்கு மேலான ஓர் உரிமையழுத்தமும், உறவுக் கட்டும் கொண்டவராக இருத்தல் வேண்டும் என்க. அவ்வாறு செய்வதற்கு உகந்தவர்கள் உறவினர்களல்லாமல் வேறெவராகவும் இருத்தல் இயலாது என்பதை ஆழ்ந்து சிந்தித்து உணர்க.

- இங்குதான், நூலாசிரியர் தம் சொல்லாற்றலை, மிகக் கூர்மையாகக் கையாண்டுள்ளார். அதற்குத்தான் கேண்மை என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

கேண்மை

கேள் + மை கேண்மை.
கிள் - கிளை - உறவு.
கிள் - கேள்- கேண்மை - உறவினர்.
நள் - பொருந்துதல் - இணைதல் - கூடுதல்
நள் + பு - நட்பு

கேண்மையும் நட்பும் ஒன்றுபோல் தோன்றி ஒருபொருள் தருமெனினும் இரண்டு சொற்களும் ஒன்றன்று. கேண்மை உறவுப் பொருள் தரும் நட்புப் பொருளும் தரும் .

ஆனால், நட்பு உறவுப் பொருளைத் தரவே தராது.

கேண்மை என்றும், ஒன்றுக்கு நட்பு என்றும் ஒரே பொருளில் இரு சொற்களைப் பயன்படுத்தும் சொல்லாடல் புலவரல்லர் நூலாசிரியர். துண்ணியசொல்லாண்மையும் கருத்து வல்லாண்மையும் உடையவர் அவர்.இவ்வுலகில் 'பயனில சொல்லாமை’ என்னும் ஒரு கருத்தை ஓர் அதிகாரமாகவே விரித்துரைத்த பேரறிவாற்றலுடையவர் வேறு எவராகவும் இருத்தல் இயலாது. அத்தகைய பேரறிவும் பேராற்றலும்