பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

65



- திருவள்ளுவர் கருத்து வேறு. இவர்களுடைய கருத்தும் விளக்கமும் வேறு. இவர்கள் கூறுவன வெல்லாம் மநுநூலாரின் 'புண்ணிய பாவக் கருத்தின் வேறு வேறு வடிவங்களே.

திருவள்ளுவர் கூறுவது, உயிரியல், உடலியல், மனவியல், மருத்துவவியல் ஆகியவற்றுக்கு, மட்டுமன்றி, உலகியலுக்கும், இயங்கியலுக்குங்கூடப் பொருந்துவதாம் என்க. இவ்வாறு பொருந்தவுரைப்பதற்காகத்தான், அவர் யாப்பியல் முறைக்கும் எதுகைப் பொருத்தம் உடையதான 'மக்கள்' என்னும் சொல்லை நேரடியாகப் பெய்யாது, 'எச்சம்’ எனும் எதுகைப் பொருத்தமின்றி வரும் சொல்லையே அங்குப் பொருத்தினார் என்க. இதிலிருந்தே இவ்வுரையாசிரியர்களெல்லாரும் ஒருதலையாகக் கொள்ளும் மக்கள் என்னும் பொருளை மட்டுமே 'எச்சம்' என்னும் சொல்லால், ஆசிரியர் குறிக்கவில்லை என்பதைத் தெளிக. இனி அவ்வாறு அது குறித்துவிடல் கூடாது என்பதே ஆசிரியர் கருத்துமாம் என்க. என்னை?

- நூலாசிரியர் 'மக்கள்' என்னும் சொல்லையே நேரடியாகப் பயன்படுத்தாமல், 'எச்சம்' என்னும் சொல்லையே ஏன் பயன்படுத்தியுள்ளார் என்பதைச் சிறிது ஆய்ந்து பார்ப்போம்.

'எச்சம்' என்னும் சொல்லுக்கு உள்ள பல பொருள்களில் 'மக்கள்' என்னும் பொருளும் அடங்குமே யன்றி, அதற்கு அதுவே முழுப் பொருள் ஆகிவிடாது என்று உணர்க.

'எச்சம்' எனும் சொல்லுள், ஒருவர் மறைவுக்குப் பின்னர் அவர் எச்சமாக விட்டுச் சென்ற பொருள்கள், அஃதாவது, அவர் சொத்துகள். செல்வங்கள், பண இருப்புகள், அவருக்குள்ள மதிப்பு, பெயர், புகழ், குடும்ப உறுப்பினர்கள், அவர் அறிஞராக இருப்பின் அவரின் எழுத்தோவியங்கள், வரைவுகள், நூல்கள், ஆராய்ச்சிக் குறிப்புகள், அவர் படித்த கருவிநூல்கள், கடன்கள் - முதலிய அனைத்து வைப்புகளும் அடங்கும் அன்றோ? இத்தனை விரிவான பொருள்களையும் மக்கள் எனும் ஒரு சொல் குறிப்பதற்கில்லை. ஒருவர் மறைவுக்குப் பின்னர் எஞ்சுபவர் அவர் மக்களாக மட்டுமே இருத்தல் இயலாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனை எவரும் எக்காரணம் கொண்டும் மறுத்தல் இயலாது. அவ்வாறிருக்கையில் எச்சம் எனும் சொல் மக்கள் எனும் அளவில் மட்டும் பொருள் தருவதாகக் கொள்வது எவ்வாறு பொருந்தும்?

எனவேதான் நூலாசிரியர் மிக விழிப்பாக மேற்கூறிய அத்தனைப் பொருள்களையும் குறிக்கும் எச்சம் எனும் ஒரு சொல்லை இங்குப் பயன்படுத்தியுள்ளார் என்று கருதுதல் வேண்டும். அவரின் சொல் பயன்படுத்தம் குறித்து அவரின் நுண்மாண் நுழைபுலத்தை முன்னரே புலப்படுத்தியுள்ளோம்.