பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அ-2-8 நடுவு நிலைமை - 12


 மேலும், நூலாசிரியர், 'எச்சம்' எனும் சொல்லை இந்நூலுள் ஒன்பது இடங்களில் பயன்படுத்தியுள்ளார். அவற்றுள் இது தவிரப் பிற ஏழு இடங்களிலும் (112, 238, 674, இருமுறை), 1004, 1012, 1076) எஞ்சி நிற்பது என்னும் பொருளையே, பரிமேலழகரும் பிறரும் கொண்டுள்ளனர். அவ்வாறிருக்க இங்கும் இன்னும் ஒர் இடத்திலும் (456) மட்டும், பரிமேலழகர் ஏன் அதற்கு 'மக்கள்' என்று பொருள் தருதல் வேண்டும். ஏனெனில், இவ்விடங்களில் மட்டுந்தான் தாம் எண்ணியவாறு மநுநூற் கருத்தை அஃதாவது ஆரிய வேதமதக் கருத்தை - அஃதாவது - பாவ, புண்ணியக் கருத்தை நுழைப்பதற்குச் சிறிது இடம் கிடைத்துள்ளது என்பதால் என்க. இவ்வாறு, ஊசி துழைய வழி கிடைத்தால் உலக்கையை மட்டுமன்று, ஒட்டகத்தையே நுழைக்கும் திறனுள்ளவர் பரிமேலழகர்.

- மக்கள் என்று பொருள் தருவதால் அவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு - நன்மை - என்னெனில், ‘புண்ணியம் செய்தவர்களின் . அஃதாவது - ‘தர்மம் செய்தவர்கள், நல்ல மக்களையும், அது செய்யாதவர்கள் அல்லது - 'பாவம்' - செய்தவர்கள் தீய மக்களையும் பெறுவார்கள் என்னும் வேதவழி, மநுதர்மக் கருத்தை வலியுறுத்தவே என்க.

- உண்மையில், மக்கள் தோற்றம் அஃதாவது - மக்கள் பேறு குழந்தைகள் பெறுவது மருத்துவ இயல், அறவியலின்படி, பெற்றோர்களின் உடற்கூற்றியல், மனவியல், மரபியல், பாலியல் முறைப்படியான விளைவு ஆகும். இஃது இத்துறையறிவு பெற்ற அனைவர்க்கும் நன்கு தெரிந்த உண்மை. இதில் புண்ணிய, பாவக் கொள்கை அஃதாவது 'கர்மா'க் கொள்கை என்பது மத வழிப்பட்ட நம்பிக்கையே தவிர, அதில் வேறு அறிவியல் தொடர்பான உண்மைகள் இருப்பதாக எவரும் இதுவரை மெய்ப்பிக்கவில்லை.

கணியவியல் என்று கூறப்பெறும் 'சோதிட நூல்' என்பது, கோளியலும், கலையியலும் கலந்த ஒரு கதம்பநூல். இதன் மூலமும் தமிழியலின் ஒரு பகுதியாகவே இருந்திருத்தல் கூடும் என்பது தமிழியலார் கொள்கை. இதன் வழியும் முழுமையும் இற்றை அறிவியலுக்குப் பொருந்துமாறில்லை. அதன் அடிப்படையே பல வழிகளில் அறிவியலுக்கு மாறுபட்டு உள்ளது. எனவே, உண்மை தெளிவாகத் தெரியப்படுத்தப் பெறுவதில்லை. இதன்படி பார்த்தாலும் வேதநூற் கொள்கை முடப்பட்டே நிற்கிறது.

எனவே எந்த வழியானும், அறவழி நின்றார்க்கு நன் மக்கள் பிறப்பதும், அறமல்லாத வழியில் நடப்பார்க்குத் தீய மக்கள் பிறப்பதும் உண்மை என்று கொள்வதற்கில்லை. தீமை நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுவார்க்கு நன்மக்கள் பிறப்பதும், அறநெறிப்பட்டார்க்குத் தீய