பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அ-2-8 நடுவு நிலைமை - 12



இல்லை என்க. இதில் தன் தனிநிலை ஆளுமை என்பது அடிபட்டுப் போதலை உணர்தல் வேண்டும். இக்கருத்தையே இக்குறள் மறுத்து, உலக இயங்கியல் நிலையே இவ்வாறு பள்ளமும் மேடுமாகப் பொதுநிலையிலேயே அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுவதையும் நாம் நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

- முன் வினையின் பயனாய்க் கேடும் பெருக்கமும் வந்துள்ளனவாகக் கருதினால், அவ் விருநிலைகளாலும் திரிபடையாமல் நிற்க வேண்டிய சான்றோரின் செயலாளுமை எதன்பாற்பட்டது என்பதை அக்கருத்தினார் விளக்கியுரைத்தல் ஒல்லுமோ? ஒல்லாதென்க.

-இக் குளறுபடிகளை ஞாயப்படுத்தவே அவர்கள் 'கர்ம' (கன்ம) பயன்களை'

- எச்சவினை (சஞ்சிதம்) சென்ற பிறவிகளில் செய்யப் பெற்றுப் பயன் நுகராமல் நிற்கும் 'கன்மம்'.

- இயங்குவினை (பிரார்த்தம்) இப் பிறவியில் நுகர்ந்து கொண்டு வரும். எச்சவினையின் பயன்.

- எதிர்வினை (ஆகாமியம்) இயங்குவினையில் நுகராமல் மீதமாவதும், இப்பிறவியில் செய்து வரும் கர்மங்களால், அடுத்த பிறவி நுகர்வுக்குத் தொகுத்து வருவதும் -

- என்று மூவகையாகப் பகுத்தனர் போலும்

- இதில், அவர்கள் வேத மதத்தினர் மிகக் கெட்டிக்காரத் தனமாகப் புளுகுவது என்னெனில், வினைகள் (அஃதாவது கர்ம(கனம)ங்கள் எப்பொழுதுமே செய்யப்படுகின்ற அப்பிறவியிலேயே நுகர்ச்சிக்கு வருவதில்லை என்பதும், அடுத்தடுத்த பிறவிகளிலேயே நுகர்ச்சிக்கு வரும் என்பதுவும் தாம். -

-நிலை இவ்வாறெனில், இவ் வினைப்பயன்கள் தொகுக்கப் பெற்று நிற்பதும், அவை ஒன்றன்பின் ஒன்றாக நுகர்ச்சிக்கு வருவதும், எங்கு, எப்படி, எவரால் என்பவற்றுக்கான விடைகளை அறிவியலடிப்படையில், அல்லது மெய்யறிவியல் அடிப்படையில் விடைகூறுவது மிகவும் இயலாதது, என்னை?

ஒருவர் ஓரிடத்து ஒருவகையான தீநாற்றத்தையோ, நறுமணத்தையோ வெளிப்படுத்தின், அஃது அவரால், அல்லது அவரோடு இணைந்து நிற்கும் பலராலும், அங்கேயே அவ்விடத்தையே நுகர்ச்சிக்கு வருவதுபோல், ஒருவர் செய்யும் வினையினது பயன் அப்பிறவியிலேயே, அங்கேயே நுகர்ச்சிக்கு வாராதெனில் அவ்வினைப்பயன், அடுத்த பிறவியல் நுகர்ச்சிக்கு வரும் வரையில், காத்தும் சேர்த்தும் தொகுத்தும் - வைக்கப் பெறுவது எங்கு, எவரால், எப்டி என்பவற்றுக்கே விளக்கம் வேண்டும் என்க.