பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

அ-2-18 ஒப்புரவறிதல் 22



- தம், நாலடியார்ச் செய்யுள்கள் 22, 37, 148 ஆகியவற்றுக்குப் பொருள் உரைக்க வந்தவிடத்து விளக்குவர். அச்செய்யுள்கள் இவை:

‘வாழ்நாள் உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின்' - நாலடி: 22:3

‘உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாது' - நாலடி: 37:3

'செல்லாமை செவ்வன்சேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்’ - நாலடி:148:3-4

ஆனால், அந்தக் காலத்து, உலகத்துப் பொதுமைச் சமநிலையுணர்வு நன்கு சிந்திக்கப் பெறாதிருந்த பொழுதில், ஒப்புரவு என்னும் தமிழியற் பண்பாட்டுச் சொல்லுக்கு அந்த அளவு மட்டில்தான் அவர்களால் பொருள் காண முடிந்திருந்தது போலும்.

ஆயினும், 'ஒப்புரவு' என்னும் 'நிகரமைச் சமநிலையுணர்வு' (Socialistic Communism) நூலாசிரியர் காலத்திலேயே, அற்றைத் தமிழ்ச் சான்றோர்களால் நன்கு உணரப்பெற்றிருந்தமையைக் கழக நூல்கள் கட்டியங் கூறி உரைதருகின்றன.

'உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்’ - 480

என்னுமிடத்தில் நூலாசிரியப் பெருமான், 'ஒப்புர'வை, 'ஒப்புரவாண்மை’ என்றே கூறுதல் கவனிக்கத் தக்கது. ஒப்புணர்வுடன் அதன் ஆளுமைச் செயலுணர்வையும் சேர்த்தே, 'ஒப்புரவாண்மை' என்று புதிய சொல்லுருவாக்கத்தைத் தருகிறார். இச்சொல் தமிழிலக்கியங்களுள் வேறெவ்விடத்திலும் எவ்வாசிரியராலும் கூறப்பெறவில்லை. திருக்குறளிலும் இவ்வொரே இடத்தில்தான் இச்சொல் கூறப்பெற்றுள்ளது.

இது, 'குமுகாய நிகரமைச் சமநிலையுணர்வை உருவப் படுத்தும் திறத்தைக் குறித்த சொல் வடிவம்’ என்க. (Faculty to mould a Socialistic Communism).

மேலும், நூலாசிரியர் ‘சான்றாண்மை அதிகாரத்தின் கண், சான்றாண்மைக்கு அடிப்படையான பண்பிலக்கணத்தைக் கூறுகையில்,

‘அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையோடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்’ - 983

என்று கட்டுரைத்துக் கூறுதலும் காண்க. மாந்தச் சமநிலையுணர்வாகிய ஒப்புரவுணர்வு இல்லாத சான்றாண்மை அவர்க்கு நிறைவு தருவதில்லை, போலும்.

இனி, அற்றை நூலாசிரியர்களும் இப்பொதுமைச் சமநிலையுணர்வை மக்களிடை அறிவுறுத்தியிருத்தலும் நன்கு சிந்திக்கத்தக்கது.