பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

அ-2-18 ஒப்புரவறிதல் 22



'மேற்கூறிய மூவேறு உவமங்களுள், ‘ஊருணி' என்பது, எல்லார்க்கும் பயன்படும் செல்வத்தையும் 'பழுமரம்' என்பது, பலர்க்குப் பயன்படும் செல்வத்தையும், 'மருந்துமரம்’ என்பது, சிலர்க்குப் பயன்படும் செல்வத்தையும் குறிக்கும் என்று கொள்ள இடமுண்டு. இங்ஙனம் பயனளவில் வேறுபடுவது, செல்வத்தின் அளவையும் ஒப்புரவாளனின் குறிக்கோளையும் பொறுத்ததாகும்.

4) ஆனால், மேற்கூறிய மூன்று உவமைகளாலும் உவமேயங்களாலும், ஆசிரியர் கூறுவந்த இறைச்சிப் பொருள்கள் இன்னும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கனவும் பயன் கொளுவத் தக்கனவும் ஆம். அவை, முன் உள்ள அட்டவணையிற் பாகுபடுத்திக் காட்டப் பெற்றுள்ளதைக் கண்டு மகிழ்க

5 முன்னைய குறள்களில் பேரறிவாளன், நயனுடையான் ஆகியவர்களிடம் ஒப்புரவுணர்வு பற்றிக் கூறியவர், இதில், பெருந்தகையானின் அறவுணர்வு பற்றிக் கூறுதலால், அவற்றின் பின் இஃது இடம் கொண்டது, என்க.


உகஅ இடனில் பருவத்தும் ஒப்புரவிற்(கு) ஒல்கார்
கடனறி காட்சி யவர். - 218

பொருள்கோள் முறை:

கடனறி காட்சியவர், இடனில் பருவத்தும்
ஒப்புரவிற்கு ஒல்கார்.

பொழிப்புரை: ஒப்புரவு அறத்தைத் தம் கடமையாக அறிவால் உணர்ந்து கடைப்பிடிப்பவர், தாம் வறுமையுற்று இயலாத காலத்தும், அதைச் செய்வதற்கு மனம் தளர மாட்டார். (தம்மால் இயன்றவரையிலாயினும் அல்லது வேறு வகையிலாயினும் முயன்று செய்வார்)

சில விளக்கக் குறிப்புகள்:

1) கடன்அறி காட்சியவர் : ஒப்புரவு அறத்தைத் தம் கடமையாக அறிவால் உணர்ந்து கடைப் பிடிப்பவர்.

காட்சி அறிவு, உணர்வு

2) இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் : தாம் வறுமையுற்று இயலாத காலத்தும், அதைச் செய்வதற்கு மனம் தளர மாட்டார்.

(தம்மால் இயன்ற வரையிலாயினும் அல்லது வேறு வகையிலாயினும் முயன்று அவ்வறத்தைச் செய்வார்)