பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

அ-2-19 ஈகை 23




அ-2 இல்லறவியல்
அ-2-19 ஈகை 23
அதிகார முன்னுரை:

ஈகை விளக்கம்:

‘ஈகை'யாவது ஈதல் - கொடுத்தல் - அதன்வழிப் பிறர்க்கு உதவுதல்.

அஃதாவது, இருப்போர் இல்லாதவர்க்குக் கொடுத்து உதவுதல். செல்வர் ஏழையர்க்கு உதவி செய்து வாழ்தல்.

முன்னதிகாரத்தில் கூறிய 'ஒப்புரவு' என்பது பெருங்கொடை உலகப் பொதுமையறம் கருதி இயங்கும் செயல்கள், பொது அமைப்புகள், சான்றோர்கள், கல்விக் கழகங்கள், வறுமையில் வாடும் தக்கவர்கள், ஏதிலியர், உறுப்புக்குறை கொண்டு வாழற்கியலாதவர்கள், வாழ்க்கைச் சமநிலை எய்துதற்குத் துணையாக நிற்கும் ஒரு பேரறவுணர்வாகும், அது.

ஆனால், ஈகை என்பது அதனின் சிறிது வேறுபட்டது; அளவில் குறைந்தது. ஒப்புரவு செய்ய இயலாதவர்க்குத் தக்கது. ஒப்புரவு பெருஞ்செல்வர்க்குரியது எனின், ஈகையறம் எல்லா மக்கட்கும் உரியது, என்க.

இல்லாத ஏழையர்க்கும், பசித்து வருவோர்க்கும், ஏதாவது உடனடித் தேவைகளை நிறைவுசெய்யக் கேட்டவர்க்கும், தம்மை நெருங்கிவந்து உதவிகேட்கும் கிளைஞர்க்கும் கேளிர்க்கும், அண்டை அயல் வாழ்பவர்க்கும் அவ்வப்பொழுது தம்மால் இயன்ற அளவு உதவுதலே ஈகையறம் ஆகும்.