பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

அ-2-19 ஈகை 23



‘சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை' - 230

‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு’ - 231

என்பன போலும், சிறிதும் தந்நலமற்ற பொதுமைப் பேரறக் கருத்துகளை உலகின் வேறு எந்த அறநூலும் ஏன், இறையிறக்கம் என்று கூறப்பெறும் திருமறைநூல்களுங்கூட, கூறியிருப்பதாகத் தெரியவில்லை.

இந்த அளவில் இவ் வீகை அறத்திற்குப் பெருமையும் மேம்பாடும் இந்நூலுள் இவ்வதிகாரத்து மிக அகலமாகவும், வேறு சில விடங்களில் மிக ஆழமாகவும் கூறப்பெற்றுள்ளன என்பதை உணர்தல் வேண்டும். அதனை இம் முன்னுரையின் பின்புலத்துக் காண்போம். அதற்கு முன்னர், சொற்பரப்பினைத் தமிழியலின் சொல்லியல், பொருளியல் அமைப்புக் கேற்ப இங்கு உணர்ந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது.

ஈகை சொல்லும் பொருளும்:

தமிழ்மொழியின்கண் ஈதலுக்குப் பல சொற்கள் உள்ளன - என்பதை ஒருவாறு உணரப்பெற்றிருக்கலாம்.

‘ஈ’, ‘தா’ என்பன ஒரெழுத்தொருமொழிகள். ‘கொடு' என்பது ஈரெழுத்தொருமொழி. இச்சொற்களே இவ் வறப்பண்பு மிகு தொன்மைக் காலந்தொட்டுப் புழங்கி வருவதை உணர்த்தப் போதிய சான்றுகளாம்.

நம் ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியத்துள்ளும் இச் சொற்கள் பேசப்பெறுவது மட்டன்றி, இச் சொற்களைப் பண்பாட்டியல் அடிப்படையில், எங்கெங்கு எவரெவர் கூறல் தகும் என்ற இலக்கணமும் அந்நூலின்கண் வகுக்கப் பெற்றிருப்பதையும் கண்டு மகிழலாம். என்னை?

‘ஈ’, 'தா', 'கொடு' வெனக் கிளக்கும் மூன்றும்

'இரவின் கிளவி ஆகிடன் உடைய' - தொல். 927


(ஆகிடன் - ஆகிடல் - ஆகிவருதல்)

'ஆகிவருதல் உடைய' என்றது ஏன் எனில், 'ஈச்சிறகு', 'தாவில் நன்பொன்', 'கொடுங்கோல்' என, அம் மூன்றுசொற்களும் பறவை முதலிய பிற பொருளும் உணர்த்துவதால், என்க அவை தனியாக வரும் சிலவிடத்து மட்டும் இரத்தல் பொருளை உணர்த்தும் என்றார்.