பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

153



இனி, இம் மூன்று சொற்களும் பயன்படுத்தப் பெறும் இடங்களையும் கீழ்வரும் நூற்பாக்களால் உணர்த்துவார், தொல்காப்பியர்.

‘ஈ'யென் கிளவி இழிந்தோன் கூற்றே!
‘தாவென் கிளவி ஒப்போன் கூற்றே'
‘கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே!'
- தொல்: 928,929,930


(இவற்றின் பொருள்:

சிறியோர் பெரியோரிடத்தில் ஒன்றை 'ஈக' எனல்வேண்டும்.

இருவரும் ஒப்போராயின், ஒருவர்க்கொருவர் 'தருக' எனல் வேண்டும்.

பெரியோர் சிறியோரிடத்தில் ஒன்றைக் 'கொடுக்க' எனல் வேண்டும்)

இனி, இவ்வாறு கூறுவது மக்களிடை ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பிடாதோ எனில் குறிப்பிடாதாம் என்க. என்னை? கல்வி, அகவை, பெருமை பிற தகுதி நிலைகளைக் குறித்தே இவை கூறப்பெற்றனவே யன்றி, சாதி, பொருளுடைமை முதலிய மாந்த நிலைக் கற்பிப்பு ஏற்றத்தாழ்வுகளைக் குறித்தன்று என்றுணர்க. இனி, இச் சொற்களின் வளர்நிலை வருமாறு:

ஈ - ஈக - ஈகை - ஈதல்.

தா - தருக - தருகை - தருதல்.

கொடு - கொடுக்க - கொடை - கொடுத்தல்.

இச் சொற்களே யன்றி, வேறுசில சொற்களும் ஈகைத்தன்மையைக் குறிக்கும் என்றுணர்க. இவற்றை உள்ளடக்கிய அவ்வனைத்துச் சொற்களும் இவை:

அளித்தல், அருளல், ஆற்றுதல், இடுதல், ஈதல், ஈன்றல், கொடுத்தல், தருதல், நல்கல், பயத்தல், வழங்குதல் - ஆகியன.

எடுத்துக்காட்டுகள்:

அளித்தல் :

‘இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு’ - 387

அருளல் :

'தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்’ - 249