பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

155



‘இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார் மாட்டு’ - 1054

இவ்வாறு கூறியவர், அப்படிப் பட்டவரிடத்தும் ஒருவர்போய் இரந்து கேட்டது இழுக்குதான். அதனால் இரவாமல் இருப்பதுதான் சிறப்பு என்றும் தன்மானமும் தன்முயற்சியும் ஊட்டுவது, மாந்தத் தன்மைக்கே மெருகு ஊட்டுவதுபோலும் சிறப்புப் பெறும் கருத்தாகும் என்க.

‘கரவாது உவந்து ஈயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்’ - 1062

இக்கருத்தைப் பின்வரும், பிற்காலத்து ஒளவையாரின் பாடல் மேலும் விளக்கப் படுத்திக் கூறுதல் காண்க.

‘உண்ணிர் உண் ணிரென்று உபசரிப்பார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்’ - தனிப்பாடல்

ஈகையறம் நூற்சான்றுகள்:

இவ் வீகையறத்தை நம் கழக இலக்கியங்களும் பிற்காலச் சான்றோர்களும் மிகுவாகச் சிறப்பித்துக் கூறுதலும், இங்கு நினைவு கூர்ந்து மகிழத்தக்கது. அவற்றுள் சில எடுத்துக் காட்டுகள்:

‘அறஞ்செய விரும்பு’
‘இயல்வது கரவேல்’
‘ஈவது விலக்கேல்’
‘ஐயம் இட்டு உண்’ - ஆத்திசூடி:1,3,4,7

'ஈரம் உடைமை ஈகையின் அறிக’ - முதுமொழி:12

‘அறத்தாற்றின் ஈயாதது ஈகையன்று’ - முதுமொழி:48

‘இயல்வது கரத்தலின் கொடுமை இல்லை’ - முதுமொழி:55

‘இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை' - முதுமொழி:60

'முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது' - இனிநாற் 19:3-4

‘ஈதற்குச் செய்க பொருளை அறநெறி
சேர்தற்குச் செய்க பெருநூலை' - திரிகடு:90:1-2

‘தானம் கொடுக்கும் தகைமை
.............................................................
நல்வினை ஆர்க்கும் கயிறு' - திரிகடு:23:1-4